மேகதாது அணைக்கு அனுமதி வழங்கக்கூடாது - பிரதமருக்கு முதல்வர் விஜய் வலியுறுத்தல்
காவிரி நீர் தீர்ப்பாயத்தின் இறுதி தீர்ப்புக்கும் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கும் முரண் இல்லை என்பது உறுதி செய்யப்படும் வரை, மேகதாது திட்டத்திற்கு எந்தவித சட்ட அல்லது நிர்வாக அனுமதியும் வழங்கக்கூடாது என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதலமைச்சர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.
பிரதமர் மோடிக்கு கடிதம்
மேகதாது அணை கட்ட தமிழ்நாட்டின் அனுமதி தேவையில்லை என்று மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் நாடாளுமன்றத்தில் அளித்த எழுத்துப்பூர்வ பதிலை சுட்டிக்காட்டியுள்ள அவர், அது தற்போதைய சட்டநிலைக்கு முரணானதுடன் ஏமாற்றம் அளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கீழ்நிலை ஆற்று மாநிலத்தின் ஒப்புதல் அவசியம் என்று உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை நினைவூட்டியுள்ள முதலமைச்சர், தமிழ்நாட்டின் அனுமதியின்றி மேகதாது அணை கட்டலாம் என்ற மத்திய அரசின் நிலைப்பாட்டை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

காவிரி என்பது வெறும் நீர் ஆதாரம் மட்டுமல்ல; கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் என்பதால், கூட்டாட்சித் தத்துவத்தையும் நீதியையும் மத்திய அரசு முழுமையாக நிலைநிறுத்த வேண்டும் என்றும் தனது கடிதத்தில் முதலமைச்சர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.