காரைக்குடியில் பேசாமல் சென்ற விஜய் - தொண்டர்கள் ஏமாற்றம்
காரைக்குடிக்கு பிரச்சாரம் மேற்கொள்ள வந்த விஜய் பேசாமல் திரும்பி சென்றதால் தொண்டர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
காரைக்குடியில் பேசாத விஜய்
தவெக தலைவர் விஜய், இன்று காரைக்குடியில் பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். இதற்காக தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையம் சென்ற அவர், அங்கிருந்த சாலை மார்க்கமாக காரைக்குடி சென்றார்.

செல்லும் வழியில் இரு புறமும் ஏராளமான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கூடி நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனால் விஜய்யின் பிரச்சார வாகனம் மெதுவாக நகர்ந்து சென்றது.
இதனிடையே, பிரச்சார வாகனத்தில் இருந்து இறங்கிய அவர், சிறுதூரம் சாலையில் சைக்கிள் ஓட்டினார். இதனால் உரிய நேரத்திற்கு பிரச்சாரம் செய்யும் இடத்திற்கு அவரால் செல்ல முடியவில்லை.

பகல் 12 மணி முதல் 2;30 மணி வரை தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கி இருந்த நிலையில், குறிப்பிட்ட நேரத்தில் அங்கு செல்ல முடியாததால் அங்கு பேசாமலே புறப்பட்டார்.
காரைக்குடி தவெக வேட்பாளர் பிரபுவை வாகனத்தில் ஏற்றி, விசில் சின்னத்தை காட்டி அவருக்கு வாக்கு சேகரித்தார்.

பல மணி நேரமாக கடும் வெயிலில் விஜய் பேச்சை கேட்க காத்திருந்த தொண்டர்கள் அவர் ஒரு வார்த்தை கூட பேசாமல் சென்றதால் ஏமாற்றமடைந்தனர்.