NDA கூட்டணியில் இணைகிறாரா விஜய்?
ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என தவெக அறிவித்த போது மற்ற கட்சிகள் கூட்டணிக்கு வராததால் சட்டப்பேரவை தேர்தலில் தவெக தனித்து களமிறங்கும் என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது NDA கூட்டணியில் இணையலாம் என பரபரப்பாக பேசப்படுகிறது.
கடந்த சில நாட்களாகவே NDA கூட்டணியில் விஜய்யை இணைப்பதற்கான முயற்சிகள் நடந்து வருவதாகவும் பேசப்பட்டு வந்தது, இத்தகவலை இதுவரையிலும் தவெக தரப்பில் இருந்து யாரும் மறுக்கவில்லை.
சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால் திமுக கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், அதிமுக இன்னும் கூட்டணிக்குள் புதிய கட்சிகள் வரும் என கூறிக்கொண்டிருக்கிறது.

இன்று மாலை திருச்சியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில், பிரதமர் மோடி கலந்து கொள்கிறார், இதில் கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்கின்றனர்.
இதற்காக வருகை தந்த ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகனிடம், விஜய் கூட்டணிக்குள் வருவாரா என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, எல்லோரும் வர்றாங்க அண்ணா என ஒரு வரியில் பதிலளித்து விட்டு அவர் காரில் ஏறினார், தொடர்ந்து விஜய் வருகிறாரா என கேட்ட போது, அண்ணன் பேசுவார் என கூறிவிட்டு சென்றார்.
எல்.முருகனின் இந்த பதில் கவனம் பெற்றுள்ளது, இதேபோன்று தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயலும், எடப்பாடி பழனிசாமி தான் NDA கூட்டணியின் தலைமை. அவரிடம் தான் கூட்டணி பற்றி கேட்க வேண்டும் என பதிலளித்தார்.
தொடர்ந்து பாஜக தரப்பில் இருந்து மறுப்பு ஏதும் வராமல் இப்படியான பதில்கள் வருவதால் பரபரப்பு அதிகரித்துள்ளது.
இருப்பினும் கொள்கை எதிரி என அறிவித்துவிட்டு அந்த கட்சியுடன் கூட்டணியா என்ற முரண்பாடும் எழாமல் இல்லை.
