தவெக கட்சிப் பெண்கள் குறித்து அவதூறு - பொன்ராஜ் மீது வழக்குப்பதிவு
தவெக கட்சி பெண்கள் குறித்து அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாக எழுந்த புகாரின் பேரில், அரசியல் விமர்சகர் பொன்ராஜ் மீது கடலூர் மாவட்ட புதுநகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னால் ஜனாதிபதி அப்துல் கலாமின் உதவியாளராக இருந்தவர் பொன்ராஜ் வெள்ளைச்சாமி.அப்துல் கலாம் விஷன் இந்தியா மூமென்ட் என்ற அமைப்பை தொடங்கி நடத்தி வருகிறார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன் தவெக பெண் நிர்வாகிகளுக்கு எதிராக ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சித்ததாக பொன்ராஜ் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
அப்போது, பெண்கள் குறித்து அவர் முன்வைத்த சில கருத்துக்கள் தவெகவினர் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதையடுத்து, அவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், சென்னை மயிலாப்பூரில் உள்ள டிஜிபி அலுவலகத்திற்கு நேரில் வருகை தந்து டிஜிபியிடம் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார்.
சுமார் 5 நிமிடங்கள் டிஜிபி அலுவலகத்தில் இருந்த அவர், புகாரை அளித்துவிட்டு உடனடியாகப் புறப்பட்டுச் சென்றார். தவெக தலைவர் விஜய்யுடன் அக்கட்சியின் முக்கிய நிர்வாகியான செங்கோட்டையனும் உடன் இருந்தார்.
டிஜிபி அலுவலக சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தவெக நிர்வாகி செங்கோட்டையன், “ஆளுங்கட்சியான தி.மு.க.வின் ஆதரவோடு, அரசியல் விமர்சகர் பொன்ராஜ் என்பவர் யூடியூப் தளம் வழியாகப் பெண்களை இழிவுபடுத்தியும், தரம் தாழ்ந்த வார்த்தைகளைப் பயன்படுத்தியும் பேசியுள்ளார். அவர் மீது உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் ” என்று தெரிவித்தார்.
டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிப்பதற்கு முன்னதாக, இச்சம்பவம் குறித்து தனது எக்ஸ்தள பக்கத்தில் தவெக தலைவர் விஜய் கடுமையான கண்டனப் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில், ஒட்டுமொத்தப் பெண்களையும் அவமதிக்கும் இச்செயலால், வருகின்ற தேர்தலில் தி.மு.க. மண்ணைக் கவ்வப் போவது உறுதி எனத் தனது கண்டனத்தைப் பதிவு செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தேர்தலில் தவெக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள நிலையில் பொன்ராஜ் மீது இந்த விவகாரம் தொடர்பாக இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடலூர் தவெக எம்எல்ஏ ராஜ்குமார் அளித்த புகாரின் பேரில் கடலூர் மாவட்டம் புதுநகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சென்னை மத்திய குற்றப்பிரிவிலும் மற்றொரு வழக்கு பொன்ராஜ் மீது பதியப்பட்டுள்ளது.