நாடாளுமன்ற தேர்தலில் நடிகர் விஜய் போட்டி..? புஸ்ஸி ஆனந்த் பதில்!
நாடாளுமன்ற தேர்தலில் நடிகர் விஜய் போட்டியிடுவாரா என்பது குறித்து விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பதிலளித்துள்ளார்.
நடிகர் விஜய்
நடிகர் விஜய் அரசியலில் கால் பாதிக்க உள்ளார் என்று அதிகமாக பேசப்பட்டு வரும் நிலையில் அதனை உறுதிப்படுத்தும் விதமாக விஜய் மக்கள் இயக்கம் சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது.
அந்தவகையில் கல்வி விழா ஒன்றை நடத்தியது மட்டுமின்றி அதில் அரசியலும் பேசினார் விஜய். இதனையடுத்து விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இரவு பாட சாலை, ரத்ததான மையம், விஜய் விழியகம், விஜய் மினி கிளினிக், விஜய் நூலகம் உள்பட மக்களுக்கு தேவையான பல சேவை மையங்களை விஜய் துவங்கினார். லியோ திரைப்பட வெற்றி விழாவில் விஜய்யின் சூசகமான அரசியல் பேச்சு, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.
தேர்தலில் போட்டியா?
மேலும், கடந்த மாதம் 30ம் தேதி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை மற்றும் தூத்துக்குடியைச் சேர்ந்த குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை விஜய் நேரில் வழங்கினார்.
இதுபோன்ற செயல்கள் மூலம் நடிகர் விஜய்யின் அரசியல் வருகை உறுதி செய்யப்பட்டு வருகிறது, இந்நிலையில் சிவகங்கை மாவட்டம், சிவகங்கையில் வேலுநாச்சியாரின் 249வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவச்சிலைக்கு விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் "நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து தளபதி அறிவிப்பார். விஜய் மக்கள் இயக்கம் ஏற்கனவே மக்களுக்கான பல்வேறு சேவையில் தளபதியின் ஆணைக்கிணங்க ஈடுபட்டுவரும் நிலையில் தொடர்ந்து மக்கள் சேவையில் ஈடுபடுவோம்" என்றார் .