விஜய் கைது செய்யப்படுவாரா? அமைச்சர் துரைமுருகன் கருத்து
விஜய் கைது செய்யப்படுவாரா என்பதற்கு அமைச்சர் துரைமுருகன் பதிலளித்துள்ளார்.
விஜய் கைதா..?
வேலூரில் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கவர்னர் ஆர்.என்.ரவி எதிர்க்கட்சித் தலைவர் போல செயல்படுகிறார்.
ஒரு கவர்னருக்குரிய கண்ணியத்தையும், அந்தஸ்தையும் காற்றில் பறக்கவிட்டுவிட்டு தரம் தாழ்ந்து பேசுகிறார். எனவே அவரை நாங்கள் கவர்னராக மதிப்பதும் இல்லை, அவர் குறித்து பேசுவதும் இல்லை. விஜய் கைது செய்யப்படுவாரா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர்,
“நாங்கள் யாரையும் அநாவசியமாக கைது செய்யமாட்டோம். ஆனால், ஆதாரங்கள் இருந்து, தவிர்க்க முடியாமல் இருந்தால் கைது செய்வோம். எனவே வீண் பயத்தோடு அவர்கள் பினாத்திக்கொண்டிருக்க தேவையில்லை. விஜய் வாகனத்தை பறிமுதல் செய்வது தொடர்பாக நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.
அமைச்சர் கருத்து
அது தொடர்பாக புலனாய்வு விசாரணை நடந்து வருகிறது. இதில் எப்போது தேவையோ அப்போது முதல்வர் நடவடிக்கை எடுப்பார். எல்லாக் கட்சிகளுக்கும் தங்களுக்கு எவ்வளவு கூட்டம் வருமென்று தெரியும். அந்த கூட்டத்துக்கு ஏற்ப நிகழ்ச்சி நடத்தும் இடம் போதுமானதா என்பதை அவர்களே முடிவு செய்ய வேண்டும்.
அதிக கூட்டம் வரும் என்றால் ஏதாவது ஒரு மைதானத்தில் கூட்டம் வைத்திருக்கலாம். எனவே ஒவ்வொரு கட்சியும், அவர்களின் நிலைக்கு ஏற்ப முடிவு எடுக்க வேண்டும்.
இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க என்ன செய்வது என்று நாங்கள் ஒரு கமிட்டி போடப் போகிறோம். அரசும் ஒரு குழு அமைக்க உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.