விஜய்யின் லியோ படத்திற்கு சிக்கல்? படக்குழு மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்!
நடிகர் விஜய்யின் லியோ படக்குழு மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
லியோ
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் லியோ திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார்.
மேலும், சஞ்சய்தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்திலிருந்து பாடல்களும் வெளிவந்து ஹிட் அடித்தது.
வரும் 19ம் தேதி லியோ திரைப்படம் திரைக்கு வரவுள்ளது. நேற்று முன்தினம் இந்த படத்தின் டிரைலர் வெளிவந்தது. இந்த டிரைலர் விஜய் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தாலும், டிரைலரில் ஒரு காட்சியில் நடிகர் விஜய் கெட்டவார்த்தை பேசியிருப்பது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
அதிக பெண்கள் மற்றும் குழந்தைகளை ரசிகர்களாக கொண்டுள்ள விஜய் இப்படி பேசியிருப்பது தவறு என்று கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளது.
புகார்
இந்நிலையில் இந்து மக்கள் கழகம் சார்பில், லியோ படக்குழு மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரில் "லியோ பட டிரைலரில் இடம்பெற்ற ஆபாச வார்த்தையை நீக்க வேண்டும்.
நடிகர் விஜய் முன்னுதாரணமாக செயல்படாமல் ஆபாச வார்த்தையை பயன்படுத்தினால் நிஜ வாழ்க்கையில் எதிரொலிக்கும். டிரைலரை தணிக்கை செய்யாமல் யூடியூபில் வெளியிட்ட படக்குழு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.