உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் - விஜய் நிவாரணம் அறிவிப்பு

Vijay Karur Thamizhaga Vetri Kazhagam
By Karthikraja Sep 28, 2025 07:42 AM GMT
Report

 கரூர் தவெக தேர்தல் பிரச்சாரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு விஜய் நிவாரணம் அறிவித்துள்ளார்.

கரூர் கூட்டநெரிசல் உயிரிழப்பு

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கரூர் தேர்தல் பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் - விஜய் நிவாரணம் அறிவிப்பு | Vijay Announce 20 Lakh Relief For Karur Stampede

தமிழக முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பல அமைச்சர்கள் கரூர் வந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 10 லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 1 லட்ச ரூபாயும் அரசு சார்பில் வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். 

[

மேலும், மத்திய அரசு சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 2 லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.580,000 வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

விஜய் நிவாரணம்

இதனையடுத்து, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 20 லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 2 லட்ச ரூபாயும் வழங்கப்படும் என விஜய் அறிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் - விஜய் நிவாரணம் அறிவிப்பு | Vijay Announce 20 Lakh Relief For Karur Stampede

இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், "கற்பனைக்கும் எட்டாத வகையில், கரூரில் நேற்று நிகழ்ந்ததை நினைத்து, இதயமும் மனதும் மிகமிகக் கனத்துப் போயிருக்கும் சூழல். நம் உறவுகளை இழந்து தவிக்கும் பெருந்துயர்மிகு மனநிலையில், என் மனம் படுகிற வேதனையை எப்படிச் சொல்வதென்றே தெரியவில்லை. கண்களும் மனசும் கலங்கித் தவிக்கிறேன்.

நான் சந்தித்த உங்கள் எல்லோருடைய முகங்களும் என் மனதில் வந்து போகின்றன. பாசமும் நேசமும் காட்டும் என் உறவுகளை நினைக்க நினைக்க, அது என் இதயத்தை மேலும் மேலும் அதன் இடத்திலிருந்தே நழுவச் செய்கிறது.

என் சொந்தங்களே… நம் உயிரனைய உறவுகளை இழந்து தவிக்கும் உங்களுக்கு, சொல்லொணா வேதனையுடன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிற அதே வேளையில், இப்பெரும் சோகத்தை உங்கள் மனதுக்கு நெருக்கமாக நின்று பகிர்ந்துகொள்கிறேன். நமக்கு ஈடு செய்யவே இயலாத இழப்புதான்.

யார் ஆறுதல் சொன்னாலும் நம் உறவுகளின் இழப்பைத் தாங்கவே இயலாதுதான். இருந்தும், உங்கள் குடும்பத்தில் ஒருவனாக, உறவினை இழந்து தவிக்கும் நம் சொந்தங்களின் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் தலா 20 லட்ச ரூபாயும், காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோருக்குத் தலா 2 லட்ச ரூபாயும் அளிக்க எண்ணுகிறேன். 

இழப்பிற்கு முன்னால் இது ஒரு பெரும் தொகையன்றுதான். இருந்தும், இந்த நேரத்தில், என்னுடைய உறவுகளான உங்களுடன் மனம்பற்றி நிற்க வேண்டியது உங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவனாக என் கடமை.

அதேபோல, காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் அனைத்து உறவுகளும் மிக விரைவில் குணமடைந்து வீடு திரும்ப இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். சிகிச்சையில் இருக்கும் நம் உறவுகள் அனைவருக்கும் அனைத்து உதவிகளையும் நம் தமிழக வெற்றிக் கழகம் உறுதியாகச் செய்யும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். இறைவன் அருளால், அனைத்தில் இருந்தும் நாம் மீண்டு வர முயற்சிப்போம்." என தெரிவித்துள்ளார்.