‘தல சொன்ன மாதிரியே இந்த படத்துக்கான வேலையை கரெக்ட்டா செஞ்சிட்டு வரேன்’ - AK' 62 குறித்து விக்னேஷ் சிவன் டாக்
தமிழ் சினிமாவில் வெற்றிகரமான இளம் இயக்குனராக வலம் வரும் விக்னேஷ் சிவன் கடந்த 2012-ம் ஆண்டு வெளிவந்த ‘போடா போடி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.
அதன் பின் அவரின் இயக்கத்தில் வெளிவந்த நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம், காத்துவாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்கள் வெற்றியை பெற்றுள்ள நிலையில், விக்னேஷ் சிவன் தற்போது நடிகர் அஜித்தின் 62-வது படத்தை இயக்கவுள்ளார்.
அஜித் குமார் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் தனது 61-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்து விட்டு விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில், அஜித்தை வைத்து இயக்க இருக்கும் படத்தின் கதை விவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார் விக்னேஷ் சிவன். இந்த படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது, அனிருத் இசையமைக்கவுள்ளார். இந்த ஆண்டின் இறுதிக்குள் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், தனது சமீபத்திய பேட்டியில் அஜீத்தோடு பணியாற்றப் போகும் படம் எப்படி இருக்கும் என்பது குறித்து பேசியுள்ளார் விக்னேஷ் சிவன். இது குறித்து பேசுகையில், “என்னுடைய 100% பணியை அந்த படத்தில் கொடுப்பேன். அஜித் சாரை நான் திரையில் பார்த்து ரசிச்சிருக்கேன்.
அவரை சந்திக்க 5 நிமிடம் கிடைத்தாலே ரொம்ப சந்தோசம். அவருடன் தினமும் பல மணி நேரங்கள் செலவழிக்க போகிறோம் என்பதும் மிகப்பெரிய சந்தோசத்தை கொடுத்துள்ளது. படத்தை தொடங்க ஆவலுடன் இருக்கிறேன். படத்தை அருமையாக கொடுக்கவேண்டும்.
அஜித் சாருக்கு அவ்வளவு ரசிகர்கள் இருக்கின்றனர். அந்த ரசிகர்களுக்கு பிடித்தவாறு ஒரு தரமான படத்தை கொடுக்கவேண்டும் என்பது தான் டாஸ்க். தோனி சொல்லுற மாதிரி, ‘ரிசல்ட்டை விட நீங்கள் செய்யும் வேலையில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்’ அதே மாதிரி தான் வேலை செய்யவேண்டும்.
அஜித் சார் நடித்த படங்களில் எனக்கு மிகவும் பிடித்த படங்கள் வாலி, முகவரி, மங்காத்தா, விஸ்வாசம், இதில் வாலி எனக்கு ரொம்ப பிடிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.