விசாரணை கைதி உயிரிழந்த விவகாரம் : 3 போலீசார் மீது கொலை வழக்கு பாய்கிறது
சென்னை தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில் விசாரணை கைதி விக்னேஷ் சந்தேகமான முறையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மரணமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
விசாரணையின்போது விக்னேஷுக்கு வலிப்பு ஏற்பட்டதால் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி விக்னேஷ் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து மாஜிஸ்திரேட் விசாரணைக்கு, சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டதை அடுத்து எழும்பூர் பெருநகர குற்றவியல் 2-வது நீதிமன்ற மாஜிஸ்திரேட் யஸ்வந்த் ராவ், தலைமைச் செயலக காலனி காவல் நிலையம் மற்றும் அயனாவரம் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
இந்நிலையில், விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த விசாரணைக் கைதி விக்னேஷின் உடற்கூராய்வு முடிவில் அவருக்கு உடலில் 13 இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலை, கண் புருவம், தாடை பகுதிகளில் காயம் இருந்ததாகவும், வலது காலில் முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், ரத்தக் கட்டுகள் காணப்படுவதாகவும், லத்தி போன்ற ஆயுதத்தால் தாக்கியதற்கான அடையாளங்களும் உடலில் காணப்படுகிறது என ஆய்வில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விக்னேஷ் மரணம் தொடர்பாக தலைமை செயலக காலனி சப்இன்ஸ்பெக்டர், காவலர், ஊர்காவல் படை வீரர் ஆகியோர் ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், விசாரணையின் போது விக்னேஷ் கடுமையாக தாக்கப்பட்டிருப்பதை பிரேத பரிசோதனை அறிக்கை உறுதி செய்துள்ளது.
இதைத் தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 3 போலீசார் மீதும் கொலை வழக்கு பாய்கிறது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி உயர் அதிகாரிகளிடம் அறிக்கை தாக்கல் செய்த பின்னர் போலீசார் மீது வழக்கு பதிவு செய்யப்பட உள்ளது.
கைதி விக்னேஷ் மரணத்தில் பழங்குடியின ஆணையம் மற்றும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.