லஞ்சம் கேட்ட மத்திய பொதுப்பணித்துறை அதிகாரி கைது - சிபிஐ நீதிமன்றம் அதிரடி உத்தரவு !
மதுரையில் லஞ்சம் கேட்ட மத்திய பொதுப்பணித் துறை நிர்வாக பொறியாளர் உள்ளிட்ட மூவரை மதுரை சிபிஐ அதிரடியாக கைது செய்தது.
மதுரையில் அமைந்துள்ள மத்திய பொதுப்பணித் துறை அலுவலகத்தில் நிர்வாகப் பொறியாளராகப் பணியாற்றி வருபவர் பாஸ்கர். இவர் மீது மதுரை சி.பி.ஐ. போலீசார்க்கு தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் இருந்தன.
இதனைத் தொடர்ந்து அவரது அலைபேசி அழைப்புகளை கடந்த சில நாட்களாக சி.பி.ஐ. போலீசார் கண்காணித்து வந்தனர்.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு, பாஸ்கர் தனது அலைபேசியில் சென்னையைச் சேர்ந்த இருவரிடம், ஒப்பந்தப் பணிக்கான நிலுவைத் தொகை மற்றும் ஜிஎஸ்டி ரிட்டர்ன் கட்டணத்தையும் விடுவிக்க கோரி ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்ட உரையாடலை போலீசார் கேட்டனர்.
தொடர்ந்து கண்காணித்ததில், பாஸ்கர் அலைபேசியில் பேசியவர்கள் சென்னையைச் சேர்ந்த ஒப்பந்தகாரர்கள் சிவசங்கர் ராஜா மற்றும் நாராயணன் எனத் தெரிய வந்தது.
அவர்கள் இருவரும் தாங்கள் போனில் பேசியபடி, நேற்று முன்தினம் இரவு மதுரை மீனாம்பாள்புரம் பகுதியில் உள்ள மத்திய பொதுப்பணித் துறை நிர்வாக பொறியாளர் பாஸ்கர் அடுக்குமாடி குடியிருப்பு வீட்டிற்கு சென்று, லஞ்சப் பணத்தை கொடுத்த போது போலீசார் அவர்களை கையும் களவுமாக மடக்கி பிடித்து கைது செய்தனர்.
இதனை தொடர்ந்து மூவரிடம் நடத்தப்பட்ட விசாரணைக்கு பிறகு சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதில் நிர்வாகப் பொறியாளர் பாஸ்கர் மற்றும் ஒப்பந்தகாரர்கள் சிவசங்கர்ராஜா, நாராயணன் ஆகிய மூவரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க சி.பி.ஐ நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார்.