கனவு நனவாகுமா..! தலித் அரசியலில் தாக்கத்தை உண்டாக்குமா விசிக?
1970களில் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆரம்பிக்கப்பட்ட தலித்து சிறுத்தைகள் கட்சி தமிழ்நாட்டிலும் தலித்து சிறுத்தைகள் இயக்கம் என்ற பெயரிலேயே மலைச்சாமி என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது.
தலித் மக்களின் பிரச்சினை
மலைச்சாமி செப்டம்பர் 1989 தான் இறக்கும் வரை இதன் மாநிலத்தலைவராக இருந்தார். இக்கட்சி தலித் மக்களின் பிரச்சினைகளை பெரும்பாலும் முன்வைத்து, அவர்களின் ஆதரவை நாடி செயல்படுகின்றது.
தலித் சிறுத்தைகள் என்னும் தலித் இயக்கத்தின் தமிழகப் பிரிவை உருவாக்கிய மலைச்சாமி என்பவர் கொலை செய்யப்பட்ட பொழுது, மதுரை தடய அறிவியல் துறையில் பணியாற்றிக்கொண்டு இருந்த தொல். திருமாவளவன் மதுரையில் மலைச்சாமிக்கு நினைவேந்தல் கூட்டம் நடத்தினார்.
விடுதலைச் சிறுத்தைகள்
அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி தொல். திருமாவளவன் அதன் அமைப்பாளாராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தலித் சிறுத்தைகள் அமைப்பிற்கு விடுதலைச் சிறுத்தைகள் என பெயர் மாற்றிய தொல்.திருமாவளவன், நீலம், சிவப்பு வண்ணப் பட்டைகளும் விண்மீனும் கொண்ட கொடியை அவ்வியக்கத்திற்கு என வடிவமைத்து 1990 ஆம் ஆண்டில் ஏப்ரல் 14 ஆம் நாளில் மதுரையில் ஏற்றினார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தேர்தலில் ஈடுபட முடிவு செய்த பொழுது, 1999 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17 ஆம் நாள் தொல். திருமாவளவன் அரசு வேலையைத் துறந்தார். ஆரம்பத்தில் தேர்தல் அரசியலில் ஈடுபட மாட்டோம் என்று விசிக அறிவித்திருந்தது. ஆனால், 1999 மக்களவைத் தேர்தலில் ஜி.கே.மூப்பனார் அழைப்பை ஏற்று முதல் முதலாக தமாகாவுடன் கூட்டணி அமைத்து விசிக தேர்தல் அரசியலில் அடியெடுத்து வைத்தது.
சட்டப்பேரவையில் திருமாவளவன்
முதல் தேர்தலிலேயே பெரம்பலூரில் 1 லட்சம், சிதம்பரத்தில் 2 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றதால் திருமாவளவன் முக்கிய அரசியல் சக்தியானார். 2001 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் கடலூர் மாவட்டம் மங்களூர் தொகுதியில் போட்டியிட்டு திருமாவளவன் சட்டப்பேரவையில் நுழைந்தார்.
திமுக உறுப்பினராக சட்டப்பேரவையில் சுயேச்சையாக செயல்பட முடியவில்லை எனக் கூறி 2004-ல் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். 2004 மக்களவைத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம், புதிய தமிழகம் கட்சியுடன் இணைந்து மக்கள் கூட்டணியை உருவாக்கினார். சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்ட திருமாவளவன் இரண்டரை லட்சம் வாக்குகளைப் பெற்று மீண்டும் தான் ஒரு முக்கிய சக்தி என்பதை நிரூபித்தார்.
விசிக சறுக்கல்
2006 பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் 9 தொகுதிகளில் தனிச் சின்னத்தில் விசிக போட்டியிட்டது. காட்டுமன்னார்குடியில் டி.ரவிக்குமாரும், மங்களூரில் கு.செல்வப்பெருந்தகையும் வெற்றி பெற்றனர். ஆனால், 2006 உள்ளாட்சித் தேர்தலில் ஏற்பட்ட சிக்கலால் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறி திமுகவுடன் கூட்டணி அமைத்தது.
2009 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் வென்றார். திமுக கூட்டணியில் 2011 பேரவைத் தேர்தலில் 10 தொகுதிகளிலும், 2014 மக்களவைத் தேர்தலில் 2 தொகுதிகளிலும் போட்டியிட்டு அனைத்திலும் விசிக தோல்வி அடைந்தது.
பாமக கோட்டையில் விசிக கொடி
2016 பேரவைத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் விசிக 25 தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வி அடைந்தது. கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் சிதம்பரத்தில் தனிச் சின்னத்தில் திருமாவளவனும், விழுப்புரத்தில் விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார் உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிட்டு வென்றனர்.
2021 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து செய்யூர், திருப்போரூர், அரக்கோணம், வானூர், காட்டுமன்னார்கோயில், நாகை என ஆறு தொகுதிகளில் போட்டியிட்டு, காட்டுமன்னார் கோயில், செய்யூர், திருப்போரூர், நாகை ஆகிய 4 தொகுதிகளில் வெற்றிபெற்றது. காட்டுமன்னார் தொகுதியில் விசிக பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன் வெற்றி பெற்றுள்ளார்.
செய்யூர் தொகுதியில் விசிக வேட்பாளர் பனையூர் பாபு வெற்றி பெற்றுள்ளார். திருப்போரு தொகுதியில் விசிகவின் மற்றொரு பொதுச் செயலாளர் எஸ்.எஸ்.பாலாஜி வெற்றி பெற்றுள்ளார். நாகை தொகுதியில் விசிகவின் துணை பொதுச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம், அமைவுள்ள சட்டப் பேரவையில் விசிக எம்.எல்.ஏ.க்கள் 10 ஆண்டுகளுக்குப் பிறகு இடம்பெறுகின்றனர்.
சிந்தனை செல்வன்
சட்டப் பேரவை உறுப்பினர் ஆவார். இவர் 2021 தமிழ்நாட்டு சட்டமன்றத் தேர்தலில் காட்டுமன்னார்கோயில் தொகுதியிலிருந்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பாமக கோட்டையாக கருதப்படும் தொகுதியில் விசிக வெற்றிபெற்றது.
பனையூர் பாபு
சமூக ஆர்வலர் மற்றும் அரசியல்வாதி. 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இவர் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் விசிக சார்பில் செய்யூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். 2004-ல் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டு மாநில இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை செயலாளரானார்,
தொடர்ந்து 2016-ல் வெளிச்சம் தொலைக்காட்சியை ஆரம்பித்து விசிகவின் மாநில ஊடகப்பிரிவின் முதன்மைச்செயலாளரானார்.
எஸ்.எஸ்.பாலாஜி
அரசியல்வாதியும் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர். 2021 ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கான தேர்தலில் திருப்போரூர் தொகுதியிலிருந்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வெற்றி பெற்ற முதல் வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர் ஆவார்.
ஆளூர் ஷாநவாஸ்
இளம் அரசியல்வாதி, ஊடகவியலாளர், எழுத்தாளர், பேச்சாளர் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளராகவும், 'தமிழ்ப் பேரவை' எனும் பன்னாட்டு தமிழ் அமைப்பின் ஒருங்கிணைப்பாளராகவும் செயலாற்றி வருகிறார். அமெரிக்கா, கனடா, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கத்தர், ஓமன், சவூதி அரேபியா, தாய்லாந்து, உகாண்டா, தென் கொரியா, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் பயணித்து உரையாற்றி உள்ளார்.
தமிழ்த் தொலைக்காட்சி ஊடக விவாதங்களில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். 2016 தமிழ்நாடு சட்டப் பேரவை தேர்தலில் வி.சி.க சார்பில் குன்னம் தொகுதியில் போட்டியிட்டு, தி.மு.க, அ.தி.மு.க போன்ற பெரிய கட்சிகளின் துணையின்றி 20,000 வாக்குகளைப் பெற்றார். தேர்தல் வரவு செலவு கணக்கை சமூக வலைதளத்தில் வெளியிட்டார். "தமிழக அரசியலில் இப்படியும் ஓர் அதிசயம்" என்ற பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருந்தது.
2021 சட்டமன்றத் தேர்தலில் நாகப்பட்டினம் தொகுதியில் போட்டியிட்டு 66,281 வாக்குகள் பெற்று, 7238 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் மதிப்பீட்டுக் குழு உறுப்பினராகவும், தமிழ்நாடு வக்பு வாரிய உறுப்பினராகவும் செயலாற்றி வருகிறார்.
ஆளூர் ஷாநவாஸ் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து 'குருதியில் நனையும் காலம்' எனும் நூலை 'உயிர்மை' பதிப்பகம் வெளியிட்டுள்ளது. மேலும், காயிதே மில்லத் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை ஆவணப்படமாக எடுத்துள்ளார்.
வன்னி அரசு
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலச் செய்தித் தொடர்பாளர், வன்னி அரசு. 2007ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பின்படி வானூர் வட்டமும் விழுப்புரம் வட்டத்தின் ஒரு பகுதியையும் உள்ளடக்கியவாறு மாற்றியமைக்கப்பட்டது. கடந்த சட்டமன்ற தேர்தலில் வானூர் தொகுதியில் விசிக சார்பில் அன்னி அரசு போட்டியிட்டார்.
ஆனால் அதில் தோல்வியை தழுவினார். தொடர்ந்து சாதிக்கு எதிராக குரல் கொடுப்பதை நிறுத்தவில்லை. பல இடங்களில் சாதிய பாகுபாடுக்காக குரல் எழுப்பி தன் இருப்பை பதிவு செய்துள்ளார். மேலும் பல கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
சட்டமன்றத்தில் விசிக குரல்
விடுதலை சிறுத்தைகள் கட்சி தேர்தல் அரசியலுக்கு வந்த பிறகு, வட தமிழகத்தில் பெரிய கட்சிகளுடன் கூட்டணி பேரம் பேசுகிற ஒரு பெரிய தலித் கட்சியாக விசிக பல ஏற்ற இறங்கங்களைக் கண்டுவந்துள்ளது. தமிழகத்தில் தலித்துகளுக்கு எதிராக எங்கே வன்முறை நடந்தாலும் முதலில் குரல் கொடுக்கிற தலித் கட்சியாக விசிக இருக்கிறது.
அதன் செயல்பாட்டில், ஒரு பிரச்னையை முன்னெடுப்பதில் தொடர்ச்சி இல்லாதது பற்றி விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் தலித்துகளை தேர்தலில் ஒரு அரசியல் சக்தியாக திரட்டியது என்றால் அது விசிகதான். தமிழ்நாட்டு தலித் அரசியல் வரலாற்றிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் இந்த சட்டமன்றத் தேர்தல் ஒரு மிக முக்கியமான தேர்தலாக அமைந்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் எத்தனையோ தலித் வன்கொடுமைகள், வன்முறைகள், சாதி ஆணவப் படுகொலைகள் நடந்திருக்கிறது. ஆனால், அதிமுக, திமுகவில் 44 பட்டியல் இன எம்.எல்.ஏ.க்கள் இருந்தபோதிலும் எந்த பிரச்னையும் சட்டமன்றத்தில் அதற்கு உரிய முக்கியத்துவத்துடனும் அழுத்தத்துடனும் விவாதிக்கப்படவும் இல்லை நியாயம் வழங்கப்படவும் இல்லை என்பது தமிழக அரசியல் கட்சிகளுக்கு இழுக்குதான்.
இந்த சூழ்நிலையில்தான், தலித் கட்சியில் இருந்து அதிகபட்சமாக 4 எம்.எல்.ஏ.க்கள் இடம் பெற்றுள்ளனர். விசிகவின் அரசியல் பார்வையில் கடந்த 10 ஆண்டுகளில் ஒரு பெரிய மாற்றம் நடந்துள்ளது. தலித்துகளின் உரிமை சார்ந்து மட்டுமில்லாமல், சிறுபான்மை மக்களுக்கு அரசியல் ரீதியான ஆதரவு, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் இடஒதுக்கீடுக்காகவும் குரல் கொடுப்பது, பாலின சமத்துவம், மாநிலங்கள் உரிமை, என்று முன்னேற்றம் கண்டுள்ளது.
சட்டமன்றத்தில் விசிக எம்.எல்.ஏ.க்களின் குரல்கள் தலித் மக்களுக்காக மட்டுமல்லாமல் அனைவருக்காகவும் ஒலிக்குமா என்பதை பார்ப்போம்.