குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு கொரோனா தொற்று உறுதி
இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் உச்சமடைந்துள்ளது. சினிமா நடிகர்கள், கிரிக்கெட்டர்கள், அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் என பிரபலங்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.
மகாராஷ்டிராவில் 20 எம்எல்ஏக்கள் 10 அமைச்சர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் கடந்த டிசம்பர் 6-ம் தேதி மத்திய உள்துறை இணை அமைச்சரான நித்யானந்த் ராய்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
அதேபோல ஜனவரி 10-ம் தேதி மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு கொரோனா தொற்று இருந்தது கண்டறியப்பட்டது. மேலும் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இச்சூழலில் தற்போது குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனை அவரின் ட்விட்டர் ஹேண்டில் உறுதி செய்துள்ளது. ஹைதாராபாத்தில் இருக்கும்போது தொற்று உறுதி செய்யப்பட்டதால் அங்கேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
மருத்துவர்களின் ஆலோசனைப்படி ஒரு வாரம் தனிமைப்படுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ளார். மேலும் தன்னுடன் தொடர்பு கொண்டவர்கள் அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு பரிசோதனை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார்.