மாநில அரசை மதிக்காமல் ஆளுநர் செயல்படும் போக்கு தலைதூக்கி உள்ளது : முதல்வர் மு.க.ஸ்டாலின்
மாநில அரசை மதிக்காமல் ஆளுநர் செயல்படும் போக்கு தலைதூக்கி உள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் சட்டமன்றத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணைவேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்வதற்கான தீர்மானம் ஒன்று வரும் மார்ச் மாதம் நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தார்.
அந்த வகையில் 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் திருத்தச் சட்ட முன்வடிவை உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி சட்டமன்றத்தில் இன்று அறிமுகம் செய்தார்.
ஆனால், அறிமுக நிலையிலேயே இதற்கு அதிமுக, பாஜக ஆகியவை எதிர்ப்பு தெரிவித்தன. பாஜக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர். அப்போது உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “உயர்கல்வியில் மாநில அரசை மதிக்காமல் ஆளுநர் செயல்படும் போக்கு தலை தூக்கியிருக்கிறது.
இது மக்களாட்சியின் தத்துவத்துக்கே விரோதமாக உள்ளது, பல்கலைக்கழக நிர்வாகத்தில் குழப்பம் ஏற்படுத்துகிறது. துணைவேந்தர் நியமன அதிகாரம் ஆளுநரிடம் இருந்தால் அது சர்ச்சைக்கு வித்திடும், ஆளுநர் – அரசுக்கு இடையே அதிகார மோதலுக்கு வித்திடும்” என்று விவரித்தார்.
பிரதமரின் சொந்த மாநிலமான குஜராத்தில் மாநில அரசு தான் துணைவேந்தரை நியமிக்கிறது என்ற சுட்டிக்காட்டிய முதலமைச்சர், “கர்நாடகம், தெலங்கானாவிலும் இதே நிலை தான். குஜராத் மாநிலம் போல் தமிழ்நாட்டிலும் மாநில அரசே துணைவேந்தரை நியமிக்கும் சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதில் அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் நெருடல் இருக்க வாய்ப்பு இல்லை. அனைத்து எம்.எல்.ஏ.க்களும் ஒருமனதாக சட்டமுன்வடிவை நிறைவேற்றித்தர வேண்டும்” என்று வலியுறுத்தினார்.