வெற்றிமாறன் படக்குழுவை தாக்கிய வன விலங்குகள் - பாதுகாப்புடன் நடக்கும் ஷூட்டிங்
இயக்குநர் வெற்றிமாறனின் விடுதலை படத்தின் படப்பிடிப்பு வனவிலங்குகள் தாக்குதலை எதிர்கொண்டு நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, விசாரணை, அசுரன் ஆகிய படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக உள்ள இயக்குநர் வெற்றிமாறன் அடுத்ததாக விஜய் சேதுபதி, சூரியை வைத்து விடுதலை என்ற படத்தை இயக்கி வருகிறார்.
ஆர்.எஸ். இன்ஃபோடெய்ன்மென்ட் சார்பாக எல்ரெட் குமார் தயாரிக்கும் இந்த படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன், பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்கள்.
படத்தின் ஷூட்டிங்கிற்காக திண்டுக்கல் அருகே சிறுமலையில் கிராம செட் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு சுமார் 400க்கும் மேற்பட்ட திரைக்கலைஞர்கள் தங்கி படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 50 நாட்களுக்கு தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடத்தி முழு படத்தையும் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
இதனிடையே ஷூட்டிங்கின் போது விஷ பாம்புகள், காட்டு மாடுகள், காட்டு நாய், அட்டைப்பூச்சிகளின் தாக்குதல்களை படக்குழுவினர் எதிர் கொண்டதாக தெரிவித்துள்ளனர். இதனால் முன்னெச்சரிக்கையாக மருத்துவர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட மருத்துவ உதவிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. விடுதலை படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.