இது மட்டும் நடக்காம இருந்திருந்தா நான் காணா போயிருப்பேன்; வெங்கடேஷ் ஐயர்
இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் வெங்கடேச ஐயர் இந்திய அணியில் இடம் பிடித்ததற்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
2021 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, துபாயில் நடைபெற்ற இரண்டாம் பாதியில் இளம் வீரரான வெங்கடேஷ் ஐயருக்கு விளையாடுவதற்கு வாய்ப்பு வழங்கியது.
இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட வெங்கடேஷ் தனது அபாரமான ஆட்டத்தின் மூலம் இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் மட்டுமில்லாமல்,உலக கிரிக்கெட் வட்டாரத்திலும் பேசப்படக்கூடிய ஒரு வீரராக திகழ்ந்தார்.
2021 ஐபிஎல் தொடரில் 10 போட்டிகளில் பங்கேற்ற வெங்கடேச ஐயர் 370 ரன்கள் அடித்து அசத்தினார், இவருடைய அபாரமான திறமையின் காரணமாக ஐபிஎல் தொடரையொட்டி நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடுவதற்கு வெங்கடேச ஐயர்க்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
இதன்மூலம் இந்திய அணிக்காக களமிறங்கிய வெங்கடேஷ் ஐயா தற்பொழுது தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியின் ஒருநாள் தொடருக்கான ஸ்குவாடிலும் இடம் பெற்றுள்ளார்.
வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக தொடரில் இடம் பெறாததால் நிச்சயம் வெங்கடேஷ் ஐயருக்கு விளையாடுவதற்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தன்னுடைய திறமை வெளிப்படுவதற்கு முக்கிய காரணமாக இருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு வெங்கடேச ஐயர் பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது நன்றியை தெரிவித்துள்ளார்.
அதில், முதலில் நான் கொல்கத்தா அணிக்கு மிகப் பெரும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன், கொல்கத்தா அணி மட்டும் இல்லை என்றால் நான் எங்கோ ஒரு மூலையில் இருந்திருப்பேன், கடந்த வருடம் நடைபெற்ற சையது முஷ்டாக் அலி போட்டியில் ஓரளவு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திருந்தேன்,
இதனால் அந்த வருடம் நடைபெற்ற ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் எனது பெயரை விண்ணப்பித்தேன் ஆனால் முதல் இரண்டு சுற்றில் நான் எந்த ஒரு அணிக்கும் விலை போகவில்லை,
கடைசியாக இறுதிச்சுற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது அணிக்காக என்னை தேர்ந்தெடுத்துக் கொண்டது, மேலும் கொல்கத்தா அணியில் நான் இருக்கும்பொழுது நான் தற்பொழுது சரியான இடத்தில் தான் இருக்கிறேன் என்ற நம்பிக்கை வந்தது,
முதலில் எனக்கு வாய்ப்பு எதுவும் வழங்கவில்லை பின் என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பு அளித்ததற்கு கொல்கத்தா அணிக்கு மிகப்பெரிய நன்றி என்று வெங்கடேஷ் ஐயர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.