தமிழ்நாட்டில் தான் அதிக தூய்மை பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர் - அதிர்ச்சி தகவல்!
தமிழ்நாட்டில் தான் அதிகம் தூய்மை பணியாளர்கள் உயிரிழப்பதாக தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணைய தலைவர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
தூய்மை பணியாளர்கள்
சேலத்தில் தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணைய தலைவர் வெங்கடேசன் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, தமிழ்நாட்டில் தூய்மை பணியாளர்களுக்கு உரிய தேதியில் சம்பளம் வழங்கப்படுவதில்லை.
அவர்களுக்கு உரிய தேதியில் சம்பளம் வழங்க வேண்டும். இதே போல் தூய்மை பணியாளர்களுக்கான சீருடை, பாதுகாப்பு உபகரணங்களை ஒப்பந்ததாரர்கள் 10 நாட்களுக்குள் வழங்க வேண்டும். அவர்களுக்கான அடிப்படை உரிமைகளை 15 நாட்களுக்குள் வழங்க வேண்டும்.
தமிழ்நாட்டில் காண்ட்ராக்டர் சிஸ்டத்தை ஒழிக்க வேண்டும். நஷ்டம் ஏற்படும் துறையை தான் தனியாரிடம் வழங்க வேண்டும். ஆனால் லாபம் இருப்பதால்தான் தூய்மை பணியை காண்ட்ராக்ட் எடுக்க பலரும் முன் வருகின்றனர்” என தெரிவித்தார்.
அதிர்ச்சி தகவல்
மேலும் பேசிய அவர், கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களில், மாநகராட்சி நிர்வாகமே ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கி வருகிறது. இதே போல் தமிழ்நாடு அரசும் நேரடியாக சம்பளம் வழங்க வேண்டும்.
இதன் மூலம் தமிழ்நாட்டில் தூய்மை பணியாளர்களுக்கான பிரச்சினை 60 சதவீதம் வரை தீரும். தூய்மை பணியாளர்களின் பாதுகாப்புக்காக தேசிய ஆணையம் இருப்பது போல, மாநில ஆணையத்தை தமிழ்நாடு அரசு அமைக்க வேண்டும்” என்றார்.
தொடர்ந்து, ”இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் தூய்மை பணியாளர்கள் அதிக அளவில் உயிரிழந்துள்ளனர். கடந்த 2022ம் ஆண்டு நிரந்தர தூய்மை பணியாளர் ஓய்வு பெற்றால் அந்த இடத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் நியமிக்கலாம் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை தமிழ்நாடு அரசு திரும்பப் பெற வேண்டும்.
தூய்மை பணியாளர்கள் வேறு தொழிலுக்கு செல்ல விருப்பப்பட்டால், அவர்களுக்கு தமிழ்நாடு அரசு, நிதி உதவி வழங்க வேண்டும். அதேபோல் மாநகராட்சிகளில் பணியாற்றும் படித்த தூய்மை பணியாளர்களை, அலுவலக உதவியாளர் மற்றும் வரி வசூலர் போன்ற படிப்பிற்கு ஏற்ற உரிய பதவிகள் வழங்கப்பட வேண்டும்” இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.