வெங்கட்பிரபுவின் அடுத்தப்பட அறிவிப்பு - ஏமாற்றத்தில் ரசிகர்கள்
இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் நடிகர்கள் பிரபுதேவாவும், அரவிந்த் சாமியும் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், ரசிகர்களுக்கு ஏமாற்றமளிக்கும் வகையில் மற்றொரு தகவலும் கிடைத்துள்ளது.
சிலம்பரசன் நடித்துள்ள 'மாநாடு' படத்தின் இறுதிக்கட்டப் பணிகளில் மும்முரமாக இருக்கும் இயக்குநர் வெங்கட் பிரபுவின் அடுத்தப்படம் குறித்த செய்தி இணையத்தில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.
அதற்கு காரணம் இந்த படத்தில் பிரபுதேவா மற்றும் அரவிந்த்சுவாமி இருவரும் இணைந்து நடிக்கவுள்ளதாகவும், வில்லனாக சுதீப் நடிக்கவுள்ளார் என்றும் வெளியான தகவல் ஒன்று தான்.
பிரபுதேவாவும், அரவிந்த் சாமியும் ஏற்கனவே கடந்த 1997 ஆம் ஆண்டு வெளியான ‘மின்சார கனவு’ படத்தில் இணைந்து நடித்திருந்தனர் என்பதால் இப்படம் குறித்து வெளியான தகவல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
ஆனால் அடுத்த படத்துக்கான கதையை இப்போது தான் எழுதத் தொடங்கியுள்ளார் என்றும், பிரபுதேவா, அரவிந்த்சுவாமி, சுதீப் என வரும் செய்திகளில் எல்லாம் உண்மையில்லை என்றும் வெங்கட் பிரபு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.