உதயசூரியன் சின்னத்தில் களமிறங்கும் வேல்முருகன்: பாமகவை குறிவைக்க திமுக திட்டம்
தமிழக வாழ்வுரிமை கட்சி கடந்த இரு வருடங்களாக திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து வந்த நிலையில் இந்த சட்டமன்ற தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அண்ணா அறிவாலயத்தில் தொகுதிப்பங்கீடு குறித்து திமுக உடன் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இன்று மாலை இதுதொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”திமுக உடன் இணைந்து தேர்தல் பணியாற்றி இருக்கிறேன். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுவுக்கு ஆதரவு அளித்தோம். அத்துடன் திமுகவுடன் இணைந்து பல போராட்டங்களை முன்னின்று நடத்தியுள்ளோம்.
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைத்தள்ளோம். எத்தனை தொகுதி அறிவித்தாலும் அதனை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்வேன்.இன்று மாலை தொகுதி பங்கீட்டில் கையெழுத்திடவுள்ளேன். திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வாழ்வுரிமை கட்சி போட்டியிடும். எதுவும் செய்யாத அதிமுகவுக்கு பாமக ஆதரவளித்துள்ளது.
அதை எதிர்த்து பரப்புரை மேற்கொள்வேன். எங்களுக்கான வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் கண்டறிந்து அந்த பட்டியலை குழுவிடம் அளித்துள்ளோம். திமுக தலைவர் அளிக்கும் தொகுதியை பெற்று கொள்வோம். இந்த கூட்டணியில் திமுக கூட்டணி வெற்றி பெறும். 10.5 சதவீத இட ஒதுக்கீடு என்பது ஏற்கனவே வன்னியர்களுக்கு கிடைத்து வந்த உரிமையை பறிக்கும் வகையில் தான் உண்டாக்குகிறது.
அனைத்து சாதிகளையும் கணக்கெடுத்து அந்தந்த சாதிகளுக்கு ஏற்ற வகையில் சமூக நீதி வழங்க வேண்டும். அப்போதுதான் வன்னியர் இனமும், பிற இனங்களுக்கு இடியே முரண்பாடு இல்லாமல் ஒற்றுமையாக இருக்க முடியும்” என்று கூறினார்.