டோலி கட்டி தூக்கிவரப்பட்ட கர்ப்பிணிக்கு ஆட்டோவில் பிரசவம்!
சாலை வசதியில்லாததால் கர்ப்பிணி பெண்ணை டோலி கட்டி துாக்கி வந்தனர்.இதனையடுத்து அப்பெண்ணிற்கு ஆட்டோவில் ஆண் குழந்தை பிறந்தது.

வேலூர் மாவட்டம் ஊசூர் அடுத்து அமைந்துள்ளது குருமலை மலை கிராமம். இங்கு பல குக்கிராமங்கள் உள்ள நிலையில் மலை கிராமத்திற்க்கு இதுவரை சாலை வசதி இல்லை. மலை மீது அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களும் இல்லை. இதனால் மக்கள் பிரசவம் மற்றும் பல சிகிச்சைக்காக டோலிகட்டு தூக்கி வருவதையே வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு குருமலை பகுதியை சேர்ந்த ராமு என்பவரின் நிறைமாத கர்பிணியான மனைவி பவுனு திடீர் வலி ஏற்படவே கிராம மக்கள் டோலி கட்டி அவரை மலை பகுதியில் இருந்து அடிவாரத்திற்க்கு சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு கரடுமுரடான பாதை வழியே தூக்கி வந்துள்ளனர். மலை அடிவாரத்தில் காத்திருந்த ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு செல்லும் போது கற்பிணி பவுனுக்கு ஆட்டோவிலேயே ஆண் குழந்தை பிறந்துள்ளது. பின்னர் மண் சாலையில் காத்திருந்த அரசு ஆம்புலன்சில் தாய் மற்றும் குழந்தைக்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் இருவரும் ஊசூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து கிராம மக்கள் தெரிவிக்கையில். குருமலை பகுதிக்கு தார்சாலை அமைக்க 1.25 கோடி நிதி ஒதுக்கி 2 ஆண்டுகள் ஆன நிலையிலும் இதுவரை சாலை போடவில்லை.
பல முறை மனு அளித்தும் வருகிறோம். மருத்துவ அவசர காலங்களில் இது போன்ற டொலி கட்டி தூக்குவதையே வாடிக்கையாக கொண்டுள்ளோம். இது பல சமயங்களில்
உயிருக்கு ஆபத்தானதாகவும் அமைந்துவிடுகிறது.ஆகவே அரசு மாவட்ட நிர்வாகம் இனியாவது துரித நடவடிக்கை எடுத்து சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.