உண்மைக்கு புறம்பானது: தவெக குற்றச்சாட்டுக்கு காவல்துறை மறுப்பு

Vellore Thamizhaga Vetri Kazhagam
By Fathima Feb 24, 2026 06:30 AM GMT
Report

தவெக நிர்வாகி நிர்மல் குமார் கூறிய குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து வேலூர் மாவட்ட காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் நிர்வாகிகள் சந்திப்பு நேற்று நடைபெற்றது, 900 காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர்.

இதற்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்த தவெக நிர்வாகி நிர்மல்குமார், வேலூரில் தவெக நிகழ்ச்சி நடத்துவதற்கு 40 நாட்களுக்கு மேலாக தவெக நிர்வாகிகள் அலைந்து வருகிறார்கள். ஆனால், அனுமதி கடிதத்தை நிகழ்ச்சிக்கு 22 மணி நேரம் முன்னதாக தான் காவல்துறை வழங்கியிருக்கிறது என குற்றஞ்சாட்டியிருந்தார்.

உண்மைக்கு புறம்பானது: தவெக குற்றச்சாட்டுக்கு காவல்துறை மறுப்பு | Vellore Police Deny 40 Day Delay Claim

இதுகுறித்து வேலூர் மாவட்ட காவல்துறை விளக்கம் அளித்துள்ளது, அதில்,  ”28.01.2026-ம் தேதி, தவெக கட்சி சார்பாக மக்கள் சந்திப்பு கூட்டத்தை 08.02.2026 அன்று நடத்தவுள்ளதாகவும், அதில் தங்கள் கட்சியின் தலைவர் மற்றும் 25,000 நபர்கள் கலந்து கொள்வார்கள் எனவும் அனுமதி கோரி மனு அளித்தனர்.

இதுகுறித்து காவல் துறை சார்பில் 30.01.2026 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தின் ஆணையை பின்பற்றி தமிழக அரசால் வழங்கப்பட்ட அரசாணை எண்.05-ன் படி நிகழ்ச்சி நடத்துவதற்கு தேவையான அடிப்படை தகவல்கள் கேட்டு கேள்வியுரை வழங்கப்பட்டது.

இந்நிலையில் 05.02.2026 அன்று தவெக நிர்வாகம் சார்பாக "சில தவிர்க்க முடியாத காரணங்களால் நாள் தள்ளிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது ஆதலால், நாங்கள் எங்கள் தலைமையிடம் மாற்று தேதி கேட்டு தங்களிடம் மீண்டும் மனு கொடுக்க உள்ளோம்" என மனு அளிக்கப்பட்டிருந்தது.

மீண்டும், 06.02.2026-ம் தேதி அன்று தவெக நிர்வாகம் சார்பாக ”நிகழ்ச்சியை 23.02.2026 அன்று நடத்தவுள்ளதாகவும், அதில் சுமார் 25,000 நபர்கள் கலந்து கொள்வார்கள்” என மனு அளிக்கப்பட்டது.

தவெகவிற்கு ஆதரவு - புதிய கட்சி அறிவிப்பு

தவெகவிற்கு ஆதரவு - புதிய கட்சி அறிவிப்பு


இதுகுறித்து நிகழ்ச்சி நடத்துவதற்கு தேவையான அடிப்படை தகவல்கள் கேட்டு கேள்வியுரை வழங்கப்பட்ட நிலையில், 18.02.2026 அன்று அளித்த மனுவில் "வேலூர் மாவட்டத்தில் 23.02.2026 அன்று எங்கள் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அவர்கள் மக்கள் சந்திப்பு கூட்டம் நடத்த அனுமதி மற்றும் பாதுகாப்பு கேட்டு 06.02.2026 அன்று கடிதம் கொடுத்திருந்தோம், அந்த நிகழ்வில் பொதுமக்கள் 25,000 கலந்துகொள்ள அனுமதி கேட்டிருந்தோம்.

ஆனால், இது நிர்வாகிகள் சந்திப்பாக மாற்றப்பட்டு, இந்த சந்திப்பில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள் மட்டும் 4900 பேர் கலந்துகொள்ள திட்டமிட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

உண்மைக்கு புறம்பானது: தவெக குற்றச்சாட்டுக்கு காவல்துறை மறுப்பு | Vellore Police Deny 40 Day Delay Claim

இதுதொடர்பாக காவல் துறையினரால் 19.02.2026-ம் தேதியன்று நிகழ்ச்சி நடத்துவதற்கு தேவையான அடிப்படை தகவல்கள் கேட்டு கேள்வியுரை வழங்கப்பட்டது.

அதற்கான, தகவல்கள் அடங்கிய பதிலுரையினை தமிழக வெற்றிக் கழகத்தினர் 20.02.2026-ம் தேதி சமர்பித்தனர். தவெக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு 5 நாட்களுக்கு முன்பாக மனு அளித்திருந்த போதிலும் பொது மக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு நிகழ்ச்சி நடைபெறும் இடத்தினை கள ஆய்வு செய்தும், வாகன நிறுத்துமிடங்களை பரிசீலனை செய்தும் 22.02.2026-ம் தேதி காவல் துறை சார்பில் அனுமதிக்கான செயல்முறை ஆணை அளிக்கப்பட்டது.

காவல்துறை அனுமதி வழங்கியதில் எவ்வித காலதாமதமும் செய்யாமல் மனு அளிக்கப்பட்ட நான்கு நாட்களில் உரிய அனுமதி வழங்கப்பட்டது.

தவெக கட்சி நிர்வாகிகள் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது காவல் துறையினரிடம் அனுமதி பெற கடந்த ஒன்றரை மாதங்களாக போராடியதாகவும், நிகழ்ச்சி நடைபெறுவதற்கு 20 மணி நேரத்திற்கு முன்பாகதான் காவல் துறையினரால் அனுமதி வழங்கப்பட்டது என கூறியது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.

மேலும், தவெக கட்சியினர் அளித்த மனுவில் கோரப்பட்டபடி 4900 கட்சி நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு மட்டுமே அனுமதி அளித்து செயல்முறை ஆணை வழங்கப்பட்டது. ஆனால், 23.02.2026-ம் தேதி அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மனுவில் குறிப்பிடப்பட்ட எண்ணிக்கைக்கு மேலாக குறைந்தபட்சம் 10,000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டதாக தெரியவருகிறது.

இச்செயலானது உயர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்கள் மற்றும் தமிழக அரசால் வெளியிடப்பட்ட அரசாணை எண்.05-ல் நிகழ்ச்சி நடத்துவதற்கு அறிவுறுத்தியுள்ள விதிமுறைகளை மீறி செயல்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

எனினும் காவல்துறையினரால் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படா வண்ணம் உரிய ஏற்பாடுகள் செய்து பாதுகாப்பு வழங்கப்பட்டது” என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.