தானாக தோன்று அம்மன் சிலைகள் - கல்லூரி மாணவருக்கு சாமி அருளா? நீடிக்கும் மர்மம்!
குடியாத்தம் அருகே மாணவன் கூறும் அருள்வாக்கு பலித்து வருகிறது. இவர், கை காட்டும் இடங்களில் அம்மன் சிலைகள் பூமியில் இருந்து கிடைத்து வருவதால் அப்பகுதி மக்கள் பக்தி பரவசம் அடைந்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த நெல்லூர்பேட்டை பாவோடம்தோப்பு பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவர் வேலூரில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பொறியியல் இறுதி ஆண்டு படித்து வருகிறார். இவர் அடிக்கடி அருள் வந்து பேசுவது வழக்கம் என அந்த பகுதி மக்கள் கூறுகின்றனர்.
நேற்று முன்தினம் இரவு திடீரென மோகன்ராஜிக்கு அருள் வந்துள்ளது. அப்போது கௌண்டண்யா ஆற்றங்கரையோரம் ஒரு குறிப்பிட்ட இடத்தை காட்டி அங்கு பள்ளம் எடுக்குமாறு கூறியுள்ளார்.
பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்தில் அங்கு பள்ளம் தோண்டியபோது சுமார் 5 அடி ஆழத்தில் ஒரு அடி அளவுள்ள கெங்கையம்மன் சிரசு கல்சிலை கிடைத்துள்ளது. இதை கண்ட அப்பகுதி மக்கள் பக்தி பரவசம் அடைந்தனர்.
பின்னர், அந்த சிலையை அங்குள்ள ஒரு கோயிலில் வைத்து அப்பகுதி மக்கள் வழிபட்டு வருகின்றனர். இதுகுறித்த தகவலறிந்து குடியாத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் பாவோடம்தோப்பு பகுதிக்கு வந்து சாமி சிலையை வழிபட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக மாணவன் மோகன்ராஜிக்கு மவுசு அதிகரித்துள்ளது.
இதேபோல் கடந்த ஆண்டும் மோகன்ராஜிக்கு திடீரென அருள் வந்து கௌடண்யா ஆற்றில் ஒரு குறிப்பிட்ட இடத்தை கை காட்டி, தோண்டுமாறு கூறியுள்ளார். அந்த இடத்தில் மக்கள் தோண்டி பார்த்தபோது, சுமார் 4 அடி ஆழத்தில் ஒரு அடி அளவில் அம்மன் சிலை கிடைத்து உள்ளது. அந்த சிலையையும் வைத்து தற்போது ஒரு சிறு கோயில் கட்டி வழிபட்டு வருவது குறி்ப்பிடத்தக்கது.