வேலூர் மாவட்ட ஆட்சியர் யார் தெரியுமா? முழு விவரம் இதோ!

Vellore
By Karthikraja Feb 13, 2025 06:00 PM GMT
Report

வேலூர் மாவட்டம்

வேலூர் மாவட்டத்திற்கு இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் முக்கிய இடம் உண்டு. 1806 ஆம் ஆண்டு வேலூர் கோட்டையிலிருந்து வெடித்து கிளம்பிய சிப்பாய் கலகம் தான் ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராக நடைபெற்ற சுதந்திர போராட்டத்திற்கு முன்னோடியாக இருந்தது.

பிரித்தானியரால் உருவாக்கப்பட்ட வட ஆற்காடு மாவட்டத்தின் ஒருபகுதியாக இருந்த வேலூர், 1989 ஆம் ஆண்டு, அந்த மாவட்டம் திருவண்ணாமலை சம்புவரையர் மாவட்டம் (இன்றைய திருவண்ணாமலை), வட ஆற்காடு அம்பேத்கர் மாவட்டம் ஆகிய பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. வட ஆற்காடு அம்பேத்கர் மாவட்டம் 1996 ஆம் ஆண்டு வேலூர் மாவட்டம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. வேலூர் மாவட்டத்தின் சில பகுதிகளை பிரித்து, 2019 ஆம் ஆண்டு இராணிப்பேட்டை மாவட்டம் மற்றும் திருப்பத்தூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது. 

vellore district

ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களுடனும், ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்துடன் வேலூர் மாவட்டம் தனது எல்லையை பகிர்ந்துள்ளது. வேலூர் மாவட்டத்தில் வேலூர் மாநகராட்சியும், வேலூர், காட்பாடி, அணைக்கட்டு, குடியாத்தம்(தனி) கீழ்வைத்தினான்குப்பம்(தனி) என 5 சட்டமன்ற தொகுதிகளும் அமைந்துள்ளது.

1801 ஆம் ஆண்டு முதலே வேலூர் மாவட்டத்திற்கு ஆட்சியர்கள் இருந்துள்ளனர். ஜார்ஜ் ஸ்ட்ராடர்ன் வேலூர் மாவட்ட முதல் ஆட்சியராக இருந்துள்ளார்.

வே.இரா.சுப்புலெட்சுமி ஐ.ஏ.எஸ்

முன்னதாக வேலூர் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த குமாரவேல் பாண்டியன் ஐ.ஏ.எஸ் பணியிட மாற்றம் செய்யப்பட்டதையடுத்து, 29.01.2024 அன்று வே.இரா.சுப்புலெட்சுமி ஐ.ஏ.எஸ் வேலூர் மாவட்டத்தின் 146 வது மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார். 

வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி ஐ.ஏ.எஸ்

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்த சுப்புலட்சுமி ஐ.ஏ.எஸ், 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப் 1 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்று அரசு பணியில் சேர்ந்தார். அதே ஆண்டில் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற இவருக்கு அஸ்ஸாம் மாநில கேடர் கிடைத்துள்ளது. ஆனால் சொந்த மாநிலத்தில் பணிபுரிய விரும்பி தமிழ்நாட்டில் துணை ஆட்சியராகப் பணியில் சேர்ந்தார்.

அதன் பிறகு 2018 ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ்ஆக பதவி உயர்வு பெற்றார். வணிகவரித்துறை நிர்வாக கூடுதல் ஆணையராக பணியாற்றி வந்த இவர் தற்போது வேலூர் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வருகிறார். மக்களுக்கு இடையூறாக இருந்த டாஸ்மாக் கடைகளை மூடியது, மக்களின் குறைகளை கனிவுடன் கேட்பது என வேலூர் மக்களின் பாராட்டை பெற்று வருகிறார்.

பெ.குமாரவேல் பாண்டியன் ஐ.ஏ.எஸ்

வேலூர் மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்து வந்த சண்முகசுந்தரம் ஐஏஎஸ், பணியிட மாற்றம் செய்யப்பட்டதையடுத்து, 07.06.2021 அன்று பெ. குமாரவேல் பாண்டியன் ஐ.ஏ.எஸ் வேலூர் மாவட்டத்தின் 145வது மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார். 

குமாரவேல் பாண்டியன் ஐ.ஏ.எஸ்

பெ. குமாரவேல் பாண்டியன் ஐ.ஏ.எஸ் 2014 பேட்ச் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆவார். முன்னதாக வேளாண்மைதுறை கூடுதல் இயக்குநர், சென்னை மாநகராட்சி துணை கமிஷனர் (கல்வி), சென்னை கலால் துறை உதவி ஆணையர், கோவை மாநகராட்சி ஆணையர் என பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்துள்ளார். 

வேலூர்மாவட்ட ஆட்சியராக இருந்த போது, மாணவர்கள் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என கடும் கண்டிப்பு காட்டினார். வகுப்பறையில் மாணவர்கள் மேசைகளை உடைக்கும் காட்சி இணையத்தில் வைரலானது. அது குறித்து விசாரணை நடத்தி 10 மாணவர்களை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும், மாணவர்களுக்கு சீராக முடி வெட்ட வேண்டும், தலை முடிக்கு கலரிங் செய்ய கூடாது, மீறினால் சலூன் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிரடி காட்டினார்.

சண்முக சுந்தரம் ஐ.ஏ.எஸ்

வேலூர் மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்து வந்த S.A.ராமன் ஐஏஎஸ், பணியிட மாற்றம் செய்யப்பட்டதையடுத்து, 01.07.2019 அன்று சண்முக சுந்தரம் ஐ.ஏ.எஸ் வேலூர் மாவட்டத்தின் 144வது மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார். 

சண்முகசுந்தரம் ஐஏஎஸ்

திருக்கோவிலூரை சேர்ந்த சண்முக சுந்தரம் ஐ.ஏ.எஸ், 2011 ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ்ஆக பதவி உயர்வு பெற்றார். மாவட்ட வருவாய் அலுவலர், பவானி சாகர் தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் பயிற்சி நிலைய முதல்வர், சென்னை அண்ணா மேலாண்மை பயிற்சி மையத்தின் கூடுதல் இயக்குநர், சென்னை மாவட்ட ஆட்சியர் என பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தார்.

வரலாற்றில் இல்லாத வகையில் முதல் முறையாக வேலூர் மாவட்டத்தை 2020 ஆம் ஆண்டு "நிவர் புயல்" தாக்கியபோது முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து பாதிப்பை முழுவதுமாக குறைத்தார். கொரோனா ஊரடங்கின்போது குழந்தைத் திருமணங்கள் அதிகம் நடப்பதை அறிந்து, சிறப்பு குழு அமைத்து சுமார் 35 திருமணத்தை தடுத்து நிறுத்தினார்.

SAVE PALARU என்ற திட்டத்தை தொடங்கி பாலாற்றின் கரைகளில் 6 லட்சம் மரக்கன்று நடும் பணியையும் துவக்கிவைத்து, குடிமராமத்து பணியையும் சிறப்பாக செய்தார். வேலூர் மாவட்டத்தை ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் என 3 ஆக பிரிக்கப்பட்ட போது திறம்பட பணியாற்றி, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தின் கடைசி ஆட்சியராகவும், பிரிக்கப்பட்ட வேலூர் மாவட்டத்தின் முதல் ஆட்சியராகவும் இருந்தார்.