வேலூரில் தீவிரமாகும் கொரோனா பாதிப்பு: ஆட்சியர் அவசர ஆலோசனை

Corona Lockdown Vellore
By mohanelango May 08, 2021 09:27 AM GMT
Report

வேலூர் மாவட்டத்தில் ஜூன் மாதம் 2 வது வாரத்தில் தினசரி பாதிப்பு 2000 தாண்டும் மாவட்ட ஆட்சியர் தகவல்.

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2-வது அலை கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை சம்பந்தமான ஆய்வு கூட்டம் ஆட்சியர் சண்முகம் சுந்தரம் தலைமையில் நடைபெற்றது.

இதில் அணைகட்டு எம்.எல்.ஏ. ஏபி.நந்தகுமார், வேலூர் எம்.எல்.ஏ கார்த்திகேயன், குடியாத்தம் எம்.எல்.ஏ அமுலு, மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் வேலூரில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பேசுகையில். வேலூர் மாவட்டத்தில் தற்போது கொரோனா இரண்டாவது அலை தீவிரமாகி வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பின் போது பாதிக்கப்பட்ட 100 பேரில் 5 அல்லது 6 பேருக்கு தான் ஆக்ஸிஜன், ஐசியு வார்டு தேவைப்பட்டன.

ஆனால் தற்போது 100க்கு 40 சதவீதம் பேருக்கு ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது. வருகிற அக்டோபர் மாதம் 3-வது அலை வர உள்ளதாக தெரிவித்துள்ளனர். இப்போதே தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டால் தான் 3-வது அலையை கட்டுப்படுத்த முடியும்.3-வது அலையின் போது 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் அதிகளவு பாதிக்கப்படுவார்கள்.

மேலும் பாதிக்கப்படுபவர்களுக்கு 2 அல்லது 3 நாட்களிலேயே ஆக்சிஜன் தேவைப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி மூலம் மட்டுமே கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர முடியும்.

சமூக இடைவெளி முக கவசம் போன்றவற்றை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். வேலூர் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தற்போது தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

வேலூர் சிஎம்சி மருத்துவ ஆராய்ச்சி குழு அவ்வப்போது அரசுக்கு சில பரிந்துரைகளை செய்து வருகிறது . அதன்படி வருகிற ஜூன் மாதம் 3-வது வாரத்தில் வேலூர் மாவட்டத்தில் தற்போது 600 ஆக உள்ள தினசரி பதிப்பு 2000 ஆக அதிகரிக்கும்.

வேலூரில் தீவிரமாகும் கொரோனா பாதிப்பு: ஆட்சியர் அவசர ஆலோசனை | Vellore Collector Inspects Covid Measures

தமிழகத்தில் தினசரி பாதிப்பு ஜூன் இரண்டாவது வாரத்தில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் வரை இருக்கும் என தெரிவித்துள்ளனர். வேலூர் மாநகராட்சி பகுதியில் தற்போது பாதிப்பு அதிகமாக உள்ளது. நகராட்சி பேரூராட்சி பகுதிகளில் பாதிப்பு அதிகமாக உள்ளது.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகள் சிகிச்சை மையங்களில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

மூன்றாவது அலையின் போது தினசரி 4 ஆயிரம் பேர் வரை சிகிச்சையில் இருக்க வேண்டிய நிலை ஏற்படும். அதற்கு தேவையான படுக்கை வசதிகளை ஏற்படுத்தி வருகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.