தவெகவில் இணைந்து ஏன்? அதிமுக முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் வெளிப்படை
அதிமுகவின் வாக்கு வங்கி தொடர்ந்து சரிந்துவருவதாகவும், இளைஞர்களை தன் பக்கம் ஈர்க்கக்கூடிய மக்கள் தலைவராக விஜய் உருவெடுத்துள்ளதாகவும், தவெகவில் இணைந்த முன்னாள் அதிமுக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்தார்.
அதிமுகவிலிருந்து விலகிய முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.இதனைத் தொடர்ந்து செய்தியாளருக்கு அளித்த பேட்டியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் பேசுகையில், எப்போதும், “தோல்விக்கு நான்தான் காரணம்” என்று ஆணித்தரமாகச் சொல்வார். யாரையும் குற்றம் சாட்டாமல், பொறுப்பை தானே ஏற்றுக்கொள்வார். அதோடு மட்டுமல்லாமல், அந்தத் தோல்வியிலிருந்து கடுமையாக களப்பணியாற்றி, அதிமுகவை மீண்டும் எங்கு கோட்டையாக மாற்றியவர் அவர்.
இப்போது நடைபெற்று வரும் நிகழ்வுகள் மிகவும் வேதனையளிக்கின்றன. இதை ஏற்றுக்கொள்வதே கடினமாக உள்ளது. 2 கோடி உறுப்பினர்களைக் கொண்ட மிகப்பெரிய இயக்கம் இன்று சிதறி சின்னாபின்னமாகி நிற்கிறது.
இவ்வளவு பெரிய தோல்விகளுக்கு காரணம் யார்? 10 தோல்வி, 11 தோல்வி என தொடர்ந்து கொண்டே செல்கிறது. ஆனால், “இந்தத் தோல்விக்கு நான்தான் பொறுப்பு. இந்தத் தோல்வியிலிருந்து மீண்டு, மீண்டும் கட்சியை அரியணையில் அமர வைப்பேன்” என்று ஒருவர் கூட முன்வந்து கூறுவதில்லை.
மக்களாக பார்த்து தமிழக வெற்றிக்காக தலைவர் விஜய்க்கு வாக்களித்திருக்கிறார். இரண்டு பெரிய கட்சிகள், இன்று இந்த தேர்தலில் இவ்வளவு பணம் செலவு பண்ணுவோம்; அந்த தேர்தலில் அவ்வளவு பணம் செலவு செய்வோம் என்று மட்டுமே யோசிக்கிறார்கள்.
இளைஞர்களை தன் பக்கம் இருக்கக்கூடிய மக்கள் தலைவராக விஜய் இருக்கிறார். வருங்காலத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர், அம்மா அவர்களின் புகழை பாடக்கூடிய தலைவராகவே அவரை நான் பார்க்கிறேன்.
மௌன புரட்சியை செய்து காட்டியிருக்கிறார். மிகப்பெரிய வெற்றியை இந்த தேர்தலில் கண்டிருக்கிறார் தமிழகத்தை சிறப்பு பெற வேண்டும் இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் தமிழகத்தை வளர்ச்சி செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் அவர் செயல்படுகிறார் என்பது எனது பார்வை என தெரிவித்துள்ளார்.