சொன்னதை செய்து காட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - வேலம்மாள் பாட்டிக்கு வீடு கிடைத்தது
வேலம்மாள் பாட்டி
இந்த வேலம்மாள் பாட்டியை யாருக்கெல்லாம் நினைவில் இருக்கிறது. ஒரே நாளில் சோஷியல் மீடியால் வைரலானவர்தான் இந்த வேலம்மாள் பாட்டி. நாகர்கோவிலைச் சேர்ந்தவர் வேலம்மாள் பாட்டி.
இவர் தமிழக அரசு வழங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பு, ரூ.2000 பணத்தை வாங்கிவிட்டு மலர்ந்த முகத்துடன் சென்றுக்கொண்டிருந்தார். இவரைப் பார்த்த ஜாக்சன் ஹெர்பி என்ற புகைப்படக் கலைஞர் புகைப்படம் எடுத்தார். அப்போது, அவர் மலர்ந்த முகத்துடன் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தார். ஜாக்சன் ஹெர்பி அதை சமூகவலைத்தளங்களில் வெளியிட, வேலம்மாள் பாட்டி சமூகவலைத்தளங்களில் ஒரே நாளில் பேமஸ் ஆனார்.
முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்த வேலம்மாள் பாட்டி
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட வேலம்மாள் பாட்டியின் புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு, ‘இந்த ஏழைத்தாயின் சிரிப்பே... நம் ஆட்சியின் சிறப்பு’ என குறிப்பிட்டார்.
சமீபத்தில், வெள்ள பாதிப்பை பார்வையிட தமிழக முதலமைச்சர் குமரிக்கு சென்றிருந்தார். அப்போது, வேலம்மாள் பாட்டி தமிழக முதலமைச்சரை நேரில் சந்தித்து, தான் வீடு இல்லாமல் கஷ்டப்படுவதாகத் தெரிவித்தார். ஏற்கெனவே வேலம்மாள் பாட்டி முன் வைத்த கோரிக்கையை ஏற்று அவருக்கு முதியோர் பென்சன் வழங்கப்பட்டு வருகிறது.
வேலம்மாள் பாட்டிக்கு வீடு
இந்நிலையில், நேற்று இரவு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உத்தரவின்பேரில் குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் பால்குளம் பகுதியில் உள்ள குடிசைமாற்று வாரியத்தின் கீழ் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் வேலம்மாள் பாட்டிக்கு வீடு ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவு நகலை நாகர்கோவில் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம் வேலம்மாள் பாட்டியிடம் வழங்கினார். இதை வாங்கிய வேலம்மாள் பாட்டி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கண்ணீர் மல்க நன்றியை தெரிவித்துள்ளார்.
மேலும், குடிசை மாற்றுவாரியத்துக்கு பயனர்கள் வழங்க வேண்டிய ரூ.76,000 நிதியையும் பாட்டியால் வழங்க முடியாது என்பதால் அதையும் அரசே வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.