கோயிலுக்கு சென்ற வாகனம் 100 அடி பள்ளத்தில் விழுந்து பயங்கர விபத்து - சம்பவ இடத்தில் 7 பேர் பலி - 20 பேர் படுகாயம்
திருப்பத்தூர் மாவட்டம், ஜவ்வாதுமலை புதூர்நாடு அடுத்த புலியூர் கிராமத்தை சேரந்தவர்கள் 20க்கும் மேற்பட்டோர் சேம்பரை பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்கு தரிசனம் செய்ய டாடா ஏசி வாகனம் மூலம் சென்றுள்ளனர்.
கோவிலுக்கு சென்றுக்கொண்டிருந்த போது, வாகனம் திடீரென்று தனது கட்டுபாட்டை இழந்தது. இதனையடுத்து, 100 அடி பள்ளத்தில் வாகனம் விழுந்தது.
இது குறித்து உடனடியாக அப்பகுதி மக்கள் தீயணைப்புத்துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு தீயணைப்புத்துறையினரும், போலீசாரும் விரைந்தனர்.
இந்த விபத்தில் சுகந்தா (55) துர்கா (40) பரிமளா (12) பவித்ரா (18) செல்வி (35) மங்கை (60) என்பவர்கள் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். மேலும், 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
படுகாயம் அடைந்தவர்களை மீட்டு போலீசார் திருப்பத்தூர் அரசு மருத்துவமனை அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து திருப்பத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மருத்துவமனையில் படுகாயத்துடன் அனுமதிக்கப்பட்டிருந்த பள்ளி மாணவி ஜெயப்பிரியா (16) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கோயிலுக்கு சென்ற வாகன விபத்தில் ஒரே ஊரை சேர்ந்த 7 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.