வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் கண்முன் நடுரோட்டில் தீக்குளித்த நபர் - பரபரப்பு சம்பவம்
சேலம், கொண்டலாம்பட்டி ரவுண்டானா பகுதியில் நேற்று இரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக மினி சரக்கு வாகனம் ஒன்று வந்தது.
அங்கிருந்த போக்குவரத்து போலீசார் அந்த மினி சரக்கு வாகனத்தை சோதனை செய்து, ஓட்டுநரையும் சோதனை செய்தனர். அப்போது, ஓட்டுநர் நன்றாக குடிபோதையில் இருந்தார்.
அவரை வாகனத்திலிருந்து கீழே இறக்கிய போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர் சந்தோஷ்குமார் என்றும், புத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து, அவர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் வாகனத்தை பறிமுதல் செய்தனர். அப்போது, போலீசாரிடம் சந்தோஷ்குமார் மதுபோதையில் வாக்குவாதம் செய்தார்.
இவர் போதையில் இருந்ததால், போலீசார் சந்தோஷ்குமார் வீட்டிற்கு செல்லும்படி கூறினர். நான் என் வண்டியோடுதான் வீட்டிற்கு செல்வேன் என்று அடம்பிடித்து போலீசாரிடம் மீண்டும் வாக்குவாதம் செய்தார். போலீசார் வாகனத்தை தர மறுத்ததால், ஆத்திரம் அடைந்த சந்தோஷ்குமார் அருகே இருந்த பெட்ரோல் பங்கிற்கு சென்று பெட்ரோல் வாங்கி வந்து போலீசார் கண்முன் நடுரோட்டில் தன் உடல் மேல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார், உடனடியாக தீயை அணைத்து அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுமார் 80 சதவிகித தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சந்தோஷ்குமாருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இச்சம்பவம் நிகழ்ந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா ஒன்றில் சந்தோஷ் குமார் மதுபோதையில் தன் மீது பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீக்குளித்த காட்சிகள் பதிவாகி இருந்தது. தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.