ஒரே இடத்தில் அடுத்தடுத்து நிகழும் சாலை விபத்துகள்: பரபரப்பை கிளப்பிய சம்பவம்
காஞ்சிபுரம் அருகே ஒரே இடத்தில் அடுத்தடுத்து நிகழும் சாலை விபத்துக்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வையாவூர் சாலை பல்வேறு கிராமங்களுக்குச் செல்லும் பிரதான சாலை என்பதால் எப்பொழுதும் வாகன போக்குவரத்து அதிக அளவில் காணப்படுவது வழக்கம்.
இந்நிலையில் வையாவூர் சாலையில் உள்ள குறிப்பிட்ட ஒரு இடத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நபர் ஒருவர் திடீரென சாலையின் இடது பக்கத்தில் இருந்து வலது பக்கம் எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் செல்ல முற்படும்போது, அவரின் பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் தனது கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற வாகனத்தின் மீது மோதினார். இதில் அந்த நபருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இந்த விபத்து அங்கே இருக்கக்கூடிய சிசிடிவி காட்சியில் பதிவாகி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த விபத்து நடந்து முடிந்த சிறிது நேரத்திலேயே குறிப்பிட்ட அதே இடத்தில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த முதியவர் மீது கண்மூடித்தனமாக வந்த இருசக்கர வாகனம் மோதியதில் இருவரும் சாலையில் கீழே விழுந்தனர். இதில் முதியவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
மேலும் குறிப்பிட்ட அந்த இடத்தில் மின்சார கம்பம் காற்றினால் சற்று சாய்ந்த நிலையில் இருப்பதனால் வாகன ஓட்டிகளுக்கு மின்சார கம்பம் சாய்வது போல் ஒரு பிம்பம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக நிலைதடுமாறி ஒருவர் பின் ஒருவராக குறிப்பிட்ட அந்த இடத்தில் சாலை விபத்தில் சிக்கி கொள்கிறார்கள் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.