முழு ஊரடங்கு அறிவிப்பு... காய்கறி விலை கடும் உயர்வு...
தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாளைமுதல் தளர்வுகளற்ற கடுமையான ஊரடங்கு அமலுக்கு வருகிறது. இதனை முன்னிட்டு ஒரு வார காலத்திற்கு தேவையான பொருள்களை வாங்கி வைத்துக் கொள்ளும் வகையில் நேற்றும் இன்றும் அனைத்து கடைகளும் திறந்திருக்கும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில் இன்று காய்கறிகள் வாங்க மார்க்கெட்டுக்கு சென்ற மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். காரணம் எப்போதும் விற்பனையாகும் விலையை விட மூன்று மடங்கு அதிக விலைக்கு காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டது.
நேற்று கிலோ ரூபாய் 10க்கு விற்கப்பட்ட தக்காளி இன்று ரூ.60க்கும்,நேற்று வரை 1கிலோ ரூ. 40க்கு விற்பனை செய்யப்பட்ட அவரைக்காய் கிலோ ரூ.300 க்கும் விற்பனை செய்யப்பட்டது. வேறு வழியில்லாமல் பொதுமக்கள் வேதனையுடன் அதிகமான விலைக்கு காய்கறிகளை வாங்கிச் சென்றனர்.