நாளை முதல் வீடுகளுக்கே வரும் காய்கறி, பழங்கள்.. தமிழக அரசு ஏற்பாடு!
தமிழகத்தில் நாளை முதல் கடும் ஊரடங்கு அமலுக்கு வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு வாகனங்கள் மூலம் காய்கறிகள் மற்றும் பழங்களை விற்பனை செய்ய தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.
இது தொடர்பாக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பின்னர், காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை தொடர்பாக வேளாண்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்:
தமிழகத்தில் காய்கறி மற்றும் பழங்கள் தேவை தினந்தோறும் சுமார் 18,000 மெட்ரிக் டன் என எதிர்பாக்கப்படுகிறது.
இதில் சென்னையில் மட்டும் தினம்தோறும் 1,500 மெட்ரிக் டன் அளவிற்கு காய்கறிகள் மற்றும் பழங்கள் தேவைப்படுகிறது.
சென்னை மாநகரத்தில் மட்டும் அனைத்து மண்டலங்களிலும் 1,610 வாகனங்கள் மூலம் தினந்தோறும் 1,160 மெட்ரிக் டன் அளவிற்கு காய்கறிகள் மற்றும் பழங்கள் விநியோகம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தின் ஏனைய பகுதிகளில் 2,770 வாகனங்கள் மூலம் 2,228 மெட்ரிக் டன் அளவிற்கு காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இப்பணிகளுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் பழங்கள் அருகில் உள்ள விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்து விநியோகம் செய்யப்படும்.
தமிழகத்தில் காய்கறிகள் மற்றும் பழங்கள் விநியோகம் தொடர்பான தகவல் தெரிந்து கொள்ள 044 - 22253884 என்ற தொலைபேசி எண்ணை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தினமும் காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை பொதுமக்களுக்கு காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது