ஆயுள் தண்டனை கைதியான சந்தன கடத்தல் வீரப்பனின் அண்ணன் திடீர் மரணம்
சந்தனக் கடத்தல் வீரப்பனின் அண்ணன் மீசை மாதையன் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.
ஒரு காலத்தில் தென்மாநிலங்களில் போலீசாருக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர் சந்தனக் கடத்தல் வீரப்பன். தமிழகம், கர்நாடகா, கேரளா மாநில போலீசாருக்கு கிட்டதட்ட 25 ஆண்டு காலமாக கண்ணாமூச்சி காட்டி வந்தவர் இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு தமிழக அதிரடிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதற்கிடையில் வீரப்பனின் அண்ணன் மாதையன் பல்வேறு வழக்குகளில் போலீசாரால் தேடப்பட்டு வந்த நிலையில் 1987 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். பின்னர் கர்நாடகா போலீசாரும் மாதையனை வழக்கு ஒன்றில் கைது செய்தனர். இவ்வழக்குகளால் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
கோவை மற்றும் சேலம் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த மாதையனுக்கு நீண்டகாலமாக உடல்நலனில் பாதிப்பு ஏற்பட்டு வந்தது. இதனால் அவ்வப்போது சேலம் அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்றும் வந்தார். மேலும் மாதையனின் உடல்நலனை கருத்தில் கொண்டு பரோலும் வழங்கப்பட்டது.
இந்நிலையில் மாதையனின் உடல்நலன் மிகவும் மோசமடைந்த நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.