என் மீது களங்கம் ஏற்படுத்த முயன்ற வீரலட்சுமி பொது மன்னிப்பு கேட்கவேண்டும் - சீமான் பேட்டி!
என் மீது களங்கம் ஏற்படுத்த முயன்ற வீரலட்சுமி பொது மன்னிப்பு கேட்கவேண்டும் என்று சீமான் பேசியுள்ளார்.
விஜயலட்சுமி விவகாரம்
திரைப்பட நடிகை விஜயலட்சுமி கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது புகார் அளித்தார். அதில் "மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சீமான் என்னைத் திருமணம் செய்துகொண்டார். நாங்கள் கணவன், மனைவியாக வாழ்ந்தோம்.
நான் 7 முறை கர்ப்பமானேன். ஆனால்,என்னுடைய அனுமதியின்றி, மாத்திரை மூலம் கருக்கலைப்பு செய்தார் போன்ற குற்றச்சாட்டுகளுடன் புகார் அளித்தார். இது தொடர்பாக வளசரவாக்கம் போலீசார் சீமான் நேரில் ஆஜராகுமாறு 2 முறை சம்மன் அனுப்பினர். இதற்கிடையில் 2 நாட்களுக்கு முன்னர் நடிகை விஜயலட்சுமி சீமான் மீது அளிக்கப்பட்ட புகாரை எழுத்துப்பூர்வமாக நள்ளிரவில் வாபஸ் பெற்றார்.
முன்னதாக விஜயலட்சுமியின் புகார் தொடர்பாக வளசரவாக்கம் போலீசார் சம்மன் அனுப்பியிருந்த நிலையில், விசாரணைக்காக மனைவியுடன், சீமான் இன்று ஆஜரானார். அவருடன் வழக்கறிஞர் ரூபன் சங்கர் உள்ளிட்ட 5 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இதனையடுத்து ஒன்றரை மணி நேரமாக சீமானிடம் விசாரணை நடைபெற்றது. விசாரணை முடிந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்து பேசினார் சீமான்.
சீமான் பேச்சு
அவர் பேசியதாவது "இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு நானே விருப்பப்பட்டு தான் வந்தேன். என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளித்துள்ளேன். சிலரின் தூண்டுதலின் பேரில் தான் என் மீது இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
என்னுடைய வளர்ச்சியை ஏற்றுக்கொள்ள முடியாமல் இதை செய்கிறார்கள். என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவே பெண்ணுடன் தொடர்புப்படுத்தி பேசுகிறார்கள். இந்த பெண்களால் 13 ஆண்டுகள் நான் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளேன்.
8 முறை கருக்கலைப்பு என்பது நகைச்சுவையாக உள்ளது. சமூக முன்னேற்றத்திற்காக பாடுபடுபவர்களை இப்படி செய்யக்கூடாது. என் மீது களங்கம் ஏற்படுத்த முயன்ற வீரலட்சுமி பொது மன்னிப்பு கேட்கவேண்டும்" என்று சீமான் பேசியுள்ளார்.