‘’எங்க எல்லாருக்கும் அந்த வீடுதான் கோயில் ‘’ - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உருக்கம்
தமிழகத்தின் முதல் அமைச்சராக இருந்து கடந்த 2016-ம் ஆண்டு நோய்த்தொற்று மற்றும் நீரிழப்பு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் உயிரிழந்தார் முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா.
இவரது மறைவிற்கு பிறகு போயஸ் தோட்டத்தில் இவர் வாழ்ந்து வந்த வேதா இல்லம் என்னவாகும் என பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில் அது நினைவு இல்லமாக மாற்றப்படும் என எடப்பாடி பழனிசாமி தலைமையிலான முந்தைய அரசு அறிவித்திருந்தது.
அதன்படி ரூ.67,88,59,690/-ஐ நகர உரிமையியல் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு செலுத்தி ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை அரசின் சொத்தாகியது.
வாரிசுதாரர்கள் மற்றும் உரிமை கோருபவர்கள் நகர நீதிமன்றத்தை நாடி, தங்களுக்குரிய தொகையை பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவித்திருந்தது. இதனை எதிர்த்து, ஜெயலலிதாவின் அண்ணன் வாரிசுகளான தீபா மற்றும் தீபக் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
அதன்படி, ஜெயலலிதாவின் சொத்து தொடர்பான வழக்கில் தங்களை நேரடி வாரிசு என சென்னை உயர் நீதிமன்றமே தீர்பளித்துள்ளதை மேற்கோள் காட்டி வாதாடினர்.
இந்த வழக்கினை நீதிபதி சேஷாயி விசாரித்துவந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளார். அதன்படி, வேதா நிலையத்தை அரசுடைமையாக்கி தமிழ்நாடு அரசு பிறப்பித்த சட்டத்தை ரத்து செய்வதாக உத்தரவிட்டார்.

மேலும் மூன்று வாரங்களில் ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோரிடம் வேதா நிலையத்தை ஒப்படைக்க வேண்டும் எனவும் வேதா நிலையம் மற்றும் மெரினாவில் உள்ள பீனிக்ஸ் நினைவிடம் என இரண்டு நினைவிடங்கள் எதற்கு என்றும் கேள்வி எழுப்பினார்.
இதுகுறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்த போது :
“ஒவ்வொரு தொண்டரின் எண்ணத்திலும் வேதா இல்லம் கோயிலாக பார்க்கப்படுகிறது.ஜெயலலிதாவின் வேதா இல்ல விவகாரத்தில் எடுக்கப்படும் மேல் நடவடிக்கை குறித்து கட்சி தலைமைதான் முடிவெடுக்கும்” என பதில் கூறியுள்ளார்.