ஸ்டெர்லைட் கொடூரத்தில் அன்றைய அதிமுக அரசுக்குப் பொறுப்பேற்பு இல்லையா : கொந்தளித்த திருமா

Thol. Thirumavalavan ADMK DMK
By Irumporai Oct 19, 2022 02:36 AM GMT
Report

ஸ்டெர்லைட் சம்பவம் குறித்து அன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எந்தப் பொறுப்பேற்பும் இல்லையா? என்று திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக அரசுக்கு பாராட்டு

இதுக்குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கையில், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அமைதியான முறையில் போராடிய பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி 13 பேர் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் அளித்த அறிக்கையை இன்று சட்டப்பேரவையில் வைத்ததற்காகவும்.

ஸ்டெர்லைட் கொடூரத்தில் அன்றைய அதிமுக அரசுக்குப் பொறுப்பேற்பு இல்லையா : கொந்தளித்த திருமா | Vck Thirumavalavan Statement Sterlite Atrocities

ஆணையத்தின் பரிந்துரைகள் மீது உரிய நடவடிக்கைகள் எடுத்திருப்பதற்காகவும் தமிழ்நாடு அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பாராட்டுகிறோம். துப்பாக்கிச் சூட்டின் விளைவாக இறப்பு, காயங்கள் ஏற்பட்டதற்கான காரணங்கள் மற்றும் சூழ்நிலைகள் குறித்து ஆராய்வது.

காவல்துறையின் தகுதியான படை பயன்படுத்தப்பட்டதா? துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன்னர் உரிய அனைத்து முன்னெச்சரிக்கை நடைமுறைகளும் கடைபிடிக்கப்பட்டனவா? போன்றவற்றை ஆராய்வது எனவரையறுக்கப்பட்ட ஆய்வு வரம்புகளின் அடிப்படையில் விசாரித்து ஆணையம் முன்வைத்த பரிந்துரைகளை முழுமையாக ஏற்றுக் கொள்வதாக தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பது பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதலைத் தருகிறது  

அத்துமீறிய காவல்துறை

காவல்துறையினர் அத்துமீறி செயல்பட்டிருந்தால் அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய வேண்டும் என்றும் அத்துமீறி செயல்பட்ட காவல்துறை அதிகாரிகள் யார் யார்? உயிரிழப்பை ஏற்படுத்தியவர்கள் யார்? யார்? என்பதைப் பற்றியெல்லாம் விசாரணை ஆணையம் விரிவாக ஆராய்ந்து ஆதாரப்பூர்வமாக அறிக்கை அளித்துள்ளது.

குறிப்பாக, குற்றவியல் நடவடிக்கை எடுப்பதற்கு குந்தகமின்றி காவல் துறை அலுவலர்கள் 17 பேர் மீதுதுறைசார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அது பரிந்துரை செய்திருக்கிறது.

அதனடிப்படையில், குற்றமிழைத்த அதிகாரிகளுக்கு எதிராகத் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென முடிவு செய்துள்ள தமிழ்நாடு அரசு, தொடர்புடைய துறைகளால் பொருத்தமான ஆணைகளை வழங்குவதற்காக மேலும் விரிவாக ஆய்வு செய்யப்படலாம்’ என்றும்சட்டப் பேரவையில் தெரிவித்துள்ளது.

அதிமுகவும் பொறுப்பு

படுகொலைக்குக் காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது துறை சார்ந்த நடவடிக்கைகளைக் காலம் தாழ்த்தாமல் எடுக்கும் அதே வேளையில், அவர்கள் மீது ஆணையம் பரிந்துரைத்தவாறு குற்றவியல் நடவடிக்கை எடுப்பதற்கும் தமிழ்நாடு அரசு முன் வர வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். 

இவ்வளவு கொடூரமான அரசப்பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு அதிகாரிகள் மட்டுமே பொறுப்பாகும் என்று சொல்ல முடியாது. அன்றைய ஆட்சியாளர்களுக்கு அதில் எந்த தொடர்பும் இல்லையா? அப்போதைய அரசு வெறுமென வேடிக்கை மட்டும்தான் பார்த்ததா?

குறிப்பாக, காவல்துறைக்குப் பொறுப்பாக இருந்த அன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு எந்தப் பொறுப்பேற்பும் இல்லையா? போன்ற வினாக்களுக்கெல்லாம் விடைதேடும் வகையில் தமிழ்நாடு அரசு புலனாய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்!" என்று குறிப்பிட்டுள்ளார்.