திமுக கூட்டணியில் விசிக-வுக்கு எத்தனை தொகுதிகள்? ஒப்பந்தம் கையெழுத்தானது

Thol. Thirumavalavan DMK Election
By Yashini Mar 24, 2026 07:17 AM GMT
Report

திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இன்று அண்ணா அறிவாலயத்துக்கு வந்த தொல்.திருமாவளவன் முதலமைச்சர் முக ஸ்டாலினை சந்தித்து பேசினார், தொடர்ந்து ஒப்பந்தம் கையெழுத்தானது.

காங்கிரஸ்- 28, முஸ்லீம் லீக்- 2, கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி-2, மனிதநேய மக்கள் கட்சி-2, மதிமுக-4, இந்திய கம்யூனிஸ்டு-5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

திமுக கூட்டணியில் விசிக-வுக்கு எத்தனை தொகுதிகள்? ஒப்பந்தம் கையெழுத்தானது | Vck Resolution To Get Double Digit Seats From Dmk

செய்தியாளர்களிடம் பேசுகையில்,

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் விசிக 6 இடங்களில் தனித்தொகுதிகளிலும், இரண்டு இடங்களில் பொதுத்தொகுதியிலும் போட்டியிடுகிறது.

கடந்த எட்டு ஆண்டுகளாக ஒத்த கருத்தியலோடு செயல்படுகிற கூட்டணி எங்கள் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி. அகில இந்திய அளவில் மதவாத, சாதிவெறி சக்திகள், வலதுசாரி சக்திகள் வலுப்பெறுவதை தடுக்க வேண்டும்.

கூட்டணியில் உள்ள நல்லவை, கெட்டவைகளை சீர்தூக்கி பார்த்து விடுதலை சிறுத்தைகளின் நலன் எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு நாம் அங்கம் வகிக்கும் கூட்டணியின் நலனும் முக்கியம் என்பதை கருத்தில் கொண்டு இந்த முடிவுக்கு விசிக உடன்பட்டிருக்கிறது, இடதுசாரி ஜனநாயக அரசியல் தமிழ் மண்ணில் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக தான் என தெரிவித்துள்ளார்.


நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

நேற்று நடைபெற்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்,

* மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கிற விசிகவின் வலிமைக்கேற்ப எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் 'இரட்டை இலக்கத்தில்' தொகுதிகளைக் கேட்டுப் பெற வேண்டும். 2028ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மாநிலங்களவைக்கான தேர்தலில் விசிகவுக்கு ஒரு இடத்தைக் கேட்டுப் பெற வேண்டும்.

* வி.சி.க அங்கம் வகிக்கும் தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி, வலதுசாரி பிற்போக்கு சக்திகளையும் அவர்களுக்கு மறைமுகமாகத் துணைநிற்கும் முதலாளித்துவ சக்திகளையும் வீழ்த்தி, 200 இடங்களுக்கும் மேலாக மகத்தான வெற்றி பெற வேண்டும். அதற்காக கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து வி.சி.க மிகுந்த பொறுப்புணர்வோடும் தீவிர முனைப்போடும் களப்பணி ஆற்றுவோம்.

* வருவாய் மாவட்ட எல்லைகளை அடிப்படையாகக் கொண்டு, கட்சியின் கட்டமைப்பை உருவாக்குவது வழக்கமான நடைமுறையாகும். ஆனால், வி.சி.க அதனின்று மாறுபட்டு 234 சட்டப்பேரவைத் தொகுதிகளையும் 'தொகுதி மாவட்டங்களாக' அறிவித்துள்ளது. இது அரசியலரங்கில் முதல் முறையாக வி.சி.க முன்னெடுத்துள்ள அரிய முயற்சியாகும். இதன்மூலம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வாக்குச்சாவடி முகவர்களை நியமிக்கக்கூடிய ஆற்றல் வாய்ந்த கட்சியாகவும் வி.சி.க வலுப்பெற்றுள்ளது.

* அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது நடத்திவரும் அநீதியானப் போரை இந்த உயர்நிலைக் குழு வன்மையாகக் கண்டிக்கிறது. சர்வதேச சட்டங்களுக்கு மாறாக குழந்தைகள் படிக்கும் பள்ளியின்மீது குண்டுவீசி சுமார் 168 குழந்தைகளை அமெரிக்கா படுகொலை செய்துள்ளது. இது போர்க்குற்றமாகும். எனவே, சர்வதேச கிரிமினல் நீதிமன்றம் அமெரிக்க அதிபரைப் போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும்.

* ஈரான் மீது நடந்துவரும் போரின் காரணமாக, உலகம் முழுவதும் எண்ணெய், எரிவாயு உள்ளிட்டவற்றின் விலைகள் கடுமையாக உயர்ந்து, மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. எனவே, இந்தப் போரை நிறுத்துவதற்கு ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் இந்தியா முழுமூச்சாகப் பாடுபட வேண்டும்.

* ஈரான் அரசு ஹார்முஸ் நீரிணையை மூடியதால், எண்ணெய் எரிவாயு தேவைகளுக்குப் பெரும்பாலும் வளைகுடா நாடுகளையே நம்பி இருக்கும் இந்தியாவுக்கு மிகப் பெரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனவே, பா.ஜ.க ஆட்சிக்கு முன்பு வரை இந்திய ஒன்றிய அரசு கடைப்பிடித்து வந்த நடுநிலைக் கொள்கையை மீண்டும் கடைபிடிக்க வேண்டும்.

* ஐந்து மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்ததும் எண்ணெய், எரிவாயு விலையை ஒன்றிய அரசு உயர்த்தப் போவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. அவ்வாறு செய்து ‘ஏழை எளிய மக்கள் மீது நிதிச் சுமையை ஒன்றிய பாஜக அரசு அதிகரிக்கச் செய்யக்கூடாது.

* சிறு வணிகர்கள் தமது அன்றாடக் கொள்முதலுக்காக எடுத்துச்செல்லும் சிறு சிறு தொகைகளைக்கூட தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்வது அவர்களது வாழ்வாதாரத்தையே சிதைப்பதாக உள்ளது. பிற மாநிலங்களில் இந்த அளவுக்கு நெருக்கடி இல்லை. எனவே மக்களின் இயல்பு வாழ்க்கை தடைபடாமல் இருக்க உரிய அறிவுறுத்தலை மாநிலத் தேர்தல் அதிகாரி (CEO) வழங்க வேண்டும்.