''இது , தவறு திமுக நடவடிக்கை எடுக்க வேண்டும் '' - நாம் தமிழர் மீதான தாக்குதல், திருமாவளவன் விமர்சனம்
நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் திமுகவினர் மேடையில் ஏறி சண்டை போட்டதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் எம்பி திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் திமுகவினர் மேடையில் ஏறி மோதலில் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தருமபுரியில் நடந்த நாம் தமிழர் கூட்டத்தில் இந்த சம்பவம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் மாநில பேச்சாளர் ஹிம்லர் பங்கேற்றார்.
அரசுக்கு எதிராக இவர் கருத்துக்களை வைத்து வந்தார். அப்போது முதல்வர் பற்றி இவர் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. அந்த கூட்டத்தில் கீழே இருந்த திமுக நிர்வாகிகள் இதை பார்த்து கோபமடைந்தனர். இதையடுத்து அங்கு இருந்த திமுக நிர்வாகிகள் சிலர் உடனே மேடை மீது ஏறி மோதலில் ஈடுபட்டனர்.
அதில் ஒரு நிர்வாகி ஹிம்லரை அடிக்க பாய்ந்தார். ஆனால் ஹிம்லர் அப்படியே பின்பக்கம் ஒதுங்கினார். இது வீடியோவாக வெளியாகி வைரலானது.
இந்த நிலையில் இந்த தாக்குதல் சம்பவத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் எம்பி திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதில், அந்த சம்பவம் தவறானது. அதை திமுக தலைமை ஒருபோதும் அங்கீகரிக்கும் நிலையை நாம் பார்க்கவில்லை. நாம் தமிழர் அவதூறு பேசியதை அப்பகுதியை சேர்ந்த திமுகவினர் தன்னியல்பாக எதிர்த்தாக சமூக வலைத்தளங்களில் திமுகவினர் விளக்கம் கொடுத்துள்ளனர்.
இருந்தாலும் கூட கருத்துக்கு கருத்துதான் முன் வைக்கப்பட வேண்டும். வன்முறைகள் கூடாது. இந்த சம்பவத்தில் திமுக தலைமைக்கு உடன்பாடு இருக்காது என்று நான் நம்புகிறேன். அரசு இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும். கருத்தை கருத்தாகவே அரசியலில் எதிர்கொள்ள வேண்டும்.
கருத்துதான் அரசியலில் முக்கியம். இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஏற்புடையது அல்ல, என்று விசிக எம்பி தலைவர் எம்பி திருமாவளவன் தெரிவித்துள்ளார்.