வேங்கைவயலில் இவர்கள் குற்றவாளிகள் இல்லை - சிபிஐ விசாரணை கேட்கும் திமுக கூட்டணி கட்சிகள்

Thol. Thirumavalavan Madras High Court Pudukkottai
By Karthikraja Jan 24, 2025 01:32 PM GMT
Report

 வேங்கைவயல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டுமென விசிக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.

வேங்கை வயல்

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கை வயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் தேதி கண்டறியப்பட்டது.  

வேங்கை வயல்

இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், இதனைக் கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தின. இதனையடுத்து வழக்கு சிபிசிஐடி காவல்துறைக்கு மாற்றப்பட்டது.

குற்றப்பத்திரிக்கை

2 ஆண்டுகளுக்கு மேலாகியும் இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை என நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்து வந்தது. இந்த வழக்கு விசாரணையில், 300க்கும் மேற்பட்ட நபர்களிடம் நேரடி சாட்சியங்களும், 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும், 31 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

madras highcourt

இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் விசாரணை முடிந்து புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விட்டதாக தமிழக அரசு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

பழிவாங்கும் நடவடிக்கை

இதில், வேங்கைவயல் பகுதி பஞ்சாயத்து தலைவராக உள்ள பத்மா முத்தையா, குடிநீர் தொட்டி ஆபரேட்டர் சண்முகத்தை பணி நீக்கம் செய்ததால், பஞ்சாயத்து தலைவரின் கணவரை பழிவாங்கும் வகையில், குடிநீரில் நாற்றம் வருவதாக முரளிராஜா என்பவர் பொய் தகவலை பரப்பியதாகவும், அதன்பின் குடிநீர் தொட்டி மீது ஏறிய முத்துகிருஷ்ணன் மற்றும் சுதர்சன் ஆகியோர் இத்தகைய குற்றச் செயலில் ஈடுபட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றம் ஏற்க கூடாது என்றும், உண்மை குற்றவாளிகளை கண்டறிய சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென்றும் திமுகவின் கூட்டணி கட்சிகளான விடுதலை சிறுத்தைகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிக்கை வெளியிட்டுள்ளன.

பெ.சண்முகம்

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "புதுக்கோட்டை மாவட்டம், வேங்கை வயல் கிராமத்தில் தண்ணீர் தொட்டியில் மலம் கலந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் ஒருவரை பழிவாங்க வேண்டுமென்பதற்காக தாங்கள் குடிக்கும் தண்ணீரில் அவர்களே மலம் கலந்திருப்பார்கள் என்று குறிப்பிட்டுள்ளது எந்த வகையிலும் ஏற்கத்தக்கதாக இல்லை. 

சம்பவம் நடந்து இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் எப்படியாவது இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வர வேண்டுமென்ற நிர்ப்பந்தம் காரணமாக பாதிக்கப்பட்ட சமூக மக்களே இதற்கு காரணம் என்பது சரியல்ல என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.

எனவே, இத்தகைய வன்கொடுமை தொடர்பான வழக்கில் உண்மை குற்றவாளிகளை கண்டறிய இவ்வழக்கை மத்திய குற்றப்புலனாய்வு பிரிவிடம் (சிபிஐ) ஒப்படைக்குமாறு தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்துகிறது." என தெரிவித்துள்ளார்.

திருமாவளவன்

விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வேங்கை வயலில் பட்டியல் சமூகத்தினர் குடிக்கும் தண்ணீரில் மலம் கலந்ததாகத்தான் வழக்கு. அந்த வழக்கில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்களே குற்றவாளிகள் என்று காவல்துறை கூறுவது அதிர்ச்சி அளிக்கிறது. இது ஏற்கத்தக்கதாக இல்லை. எனவே, சிபிசிஐடி சமர்ப்பித்திருக்கும் குற்றப் பத்திரிகையை விசாரணை நீதிமன்றம் ஏற்கக் கூடாது எனவும் மேல்விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் வலியுறுத்துகிறோம்.

சிபிசிஐடி இந்த வழக்கில் விசாரணையை மேற்கொண்ட நிலையில்கூட கடந்த இரண்டு ஆண்டுகளாகக் குற்றவாளிகளை அடையாளம் காண்பதில் மெத்தனமாகவே இருந்தது. உயர் நீதிமன்றம் ஒவ்வொரு முறையும் இதில் கடுமையாக அறிவுறுத்திய பிறகும்கூட குற்றவாளிகள் யார் எனக் காவல்துறை கூறவில்லை. தற்போது இது தொடர்பாக சிபிஐ விசாரணை கேட்ட வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுவிடுமோ என்ற அய்யத்தில், அதைத் தடுப்பதற்காகவே இந்தக் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாகக் கருத வேண்டியுள்ளது. 

உண்மையான குற்றவாளிகளைக் காப்பாற்றும் நோக்கோடு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது. எனவே, இந்த வழக்கை விசாரித்து வரும் விசாரணை நீதிமன்றம் சிபிசிஐடி தாக்கல் செய்திருக்கும் குற்றப்பத்திரிக்கையை ஏற்கக் கூடாது என வலியுறுத்துகிறோம். அத்துடன், தமிழ்நாடு அரசே முன்வந்து இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்" என தெரிவித்துள்ளார்.