திருமாவளவனை அவமதித்த பிரேமலதா? கொந்தளிக்கும் விசிக தொண்டர்கள்
திருமாவளவனை பிரேமலதா விஜயகாந்த் அவமதித்து விட்டதாக விசிக தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
திருமாவளவனை அவமதித்த பிரேமலதா?
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார்.
கடலூர் மாவட்டத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது, கூட்டணி கட்சி தலைவர்களான விசிக தலைவர் திருமாவளவன், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் மேடையில் இருந்தனர்.
விசிக தலைவர் திருமாவளவன் கூட்டணி கட்சி வேட்பாளர்களின் பெயரை அறிமுகம் செய்த போது, அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் உட்பட அனைத்து வேட்பாளர்களும் எழுந்து நின்று மக்களை நோக்கி வணங்கினர்.

ஆனால் விருதாச்சலம் தொகுதியில் போட்டியிடும் பிரேமலதா விஜயகாந்தின் பெயரை திருமாவளவன் உச்சரித்த போது, எந்த சலனமும் இன்றி பிரேமலதா இருக்கையில் அமர்ந்திருந்தார்.
அதன் பின்னர் மு.க.ஸ்டாலின் பேசும் போது, பிரேமலதாவின் பெயரை சொன்னபோது, உடனே எழுந்து நின்று கூட்டத்தைப் பார்த்து கைக்கூப்பி வணங்கினார்.
விசிக தொண்டர்கள் எதிர்ப்பு
இந்த செயல் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், விசிக தொண்டர்களை ஆத்திரப்படுத்தியுள்ளது.

பிரேமலதா சாதியின் காரணமாகவே இவ்வாறு நடந்து கொள்வதாகவும், இதனால் தேமுதிக போட்டியிடும் தொகுதிகளில் விசிகவினர் தேர்தல் வேலை பார்க்கக்கூடாது என விசிக தொண்டர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வந்தனர்.

இன்று பிரேமலதா விஜயகாந்த் தருமபுரிக்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய சென்ற போது, தலைவர் திருமாவளவன் உங்கள் பெயரை உச்சரித்த போது, எழுந்திரிக்காதது ஏன் என எழுதப்பட்ட பேனருடன் பிரச்சாரம் நடைபெற இடத்திற்கு சென்று எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.