"மறு ஜென்மம் பெற்றுள்ளேன்” - வாவா சுரேஷ் இமோஷனல் பேச்சு
தான் மறு ஜென்மம் பெற்றுள்ளதாக பாம்பு பிடி மன்னன் வாவா சுரேஷ் தெரிவித்துள்ளார்.
மக்கள் வாழும் வாழ்விடங்களில் நுழைந்து விடும் விஷப்பாம்புகளை எந்த ஒரு பெரிய ஆயுதங்களையும் பயன்படுத்தாமல் பிடித்து வனப்பகுதிகளில் விடுவதை வழக்கமாக கொண்டு மக்களிடையே ஒரு பிரபலம் போல் அறியப்படுபவர் கேரளத்தை சேர்ந்த வாவா சுரேஷ்.
கடந்த ஜனவரி 31-ந் தேதி மாலை கோட்டயம் மாவட்டத்தை அடுத்த குரிச்சியில் ஒரு வீட்டில் நாக பாம்பு நுழைந்ததையடுத்து அதனை பிடிக்க வாவா சுரேஷிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து அங்கு சென்ற வாவா சுரேஷ் நாகப்பாம்பை பிடித்தபோது எதிர்பாராத விதமாக அவரது தொடைப்பகுதியில் பாம்பு கடித்தது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து கடந்த திங்கள் கிழமை கோட்டயம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வாவா சுரேஷ் அனுமத்திக்கப்பட்டார்.
அவரை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.
மூன்று நாட்கள் தொடர்ந்து சுய நினைவை இழந்த நிலையில் கடந்த வியாழக்கிழமையன்று சுயநினைவு பெற்ற வாவா சுரேஷ் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்து வந்தார்.
இந்நிலையில் இன்று காலை 11 மணியளவில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வாவா சுரேஷ் வீடு திரும்பினார்.
வாவா சுரேஷின் உடம்பில் இருந்த நாகப்பாம்பின் விஷத்தை எடுக்க 65 பாட்டில் பாம்பு விஷத்தை எடுக்க பயன்படுத்தப்படும் மருந்துகள் உபயோகிக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட வாவா சுரேஷ் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர் இது தனக்கு மறு ஜென்மம் கிடைத்தது போல உள்ளதாக தெரிவித்தார்.
மேலும் பாம்பு பிடிப்பதை தொடர்ந்து செய்ய இருப்பதாக தெரிவித்த அவர் இனிமேல் மிகுந்த கவனத்துடன் செயல்படுவேன் எனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் மக்கள் என் மீது கொண்ட அன்பால் தொடர் பிரார்த்தனை செய்ததால் தான் மறு ஜென்மம் பெற்று இருக்கிறேன் என்று உணர்ச்சி பொங்க பேசினார்.
வாவா சுரேஷின் மருத்துவ செலவு முழுவதையும் அரசே ஏற்கும் என கேரள சுகாதார துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.