சாகும் வரை பாம்புகள் பிடிப்பேன் - டிஸ்சார்ஜ் ஆன வாவா சுரேஷ் சபதம்
மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன பிரபல பாம்புபிடி வீரர் வாவா சுரேஷ் சபதம் ஒன்றை எடுத்துள்ளார்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த வாவா சுரேஷ் பாம்பு பிடிப்பதில் வல்லவர். சுமார் 50,000க்கும் மேற்பட்ட பாம்புகளை இதுவரை பிடித்துள்ள அவர் சுரேஷ் பாம்பு பிடிக்கும் ஸ்டைலைப் பார்க்க ஊரே ஒன்று கூடும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். கேரளாவில் வீடுகளுக்குள் பாம்பு புகுந்துவிட்டால் வனத்துறைக்கோ, தீயணைப்புத்துறைக்கோ போன் செய்வதை விடுத்து வாவா சுரேஷூக்கு தான் போன் செல்லும்.
இதனிடையே கோட்டயம் மாவட்டத்தில் சங்கனாச்சேரி அருகே உள்ள குறிச்சி பகுதியில் நாகப்பாம்பு ஒன்று ஊருக்குள் சுற்றித்திரிவதாக வா வா சுரேஷுக்குத் தகவல் கிடைக்க களத்தில் இறங்கினார். அப்போது 7 அடி நீளமுள்ள நாகப் பாம்பு வெளியே வந்தது. பாம்பின் வாலைப் பிடித்த வா வா சுரேஷ், அதை ஒரு டப்பாவில் அடைக்க முயன்றார்.
ஆனால் பாம்பு திடீரென வாவா சுரேஷின் வலது கால் தொடையில் கடித்தது. உடனடியாக அவர் கடிபட்ட இடத்தை நன்றாக அழுத்தி ரத்தத்தை வெளியேற்றினார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் சுரேஹை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். முதற்கட்டமாக அவருக்கு விஷமுறிவு மருந்து கொடுக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் சுய நினைவை இழந்து சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
பாம்பு கடிக்கும் வீடியோவும் சமூகவலைத்தளத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில் கோமாவில் இருந்து சில நாட்களுக்கு முன்பு மீண்ட அவருக்கு செயற்கை சுவாசக் கருவி நீக்கப்பட்டது. பின் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் இருந்த அவருக்கு சிகிச்சைக்கான செலவை கேரள அரசே ஏற்றது. இந்த நிலையில் சிகிச்சை முடிந்து வாவா சுரேஷ் மருத்துவமனையில் இருந்து இன்று வீடு திரும்பினார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் இது எனக்கு மறுபிறவி. இனி பாம்புகளை பிடிக்கும் போது கூடுதல் ஜாக்கிரதையாக இருப்பேன். ஆனால் நான் இறக்கும் வரை பாம்புகளை பிடித்துக் கொண்டே இருப்பேன் என கூறினார்.