ரஜினி மட்டும் ஆதரவா பேசலானா..? மீண்டும் மிரட்டல் விடும் வாட்டாள் நாகராஜ்
காவிரி நதிநீர் பிரச்சனையில் நடிகர் ரஜினிகாந்த் கர்நாடக மாநிலத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவிக்கவேண்டும் என கர்நாடகாவை சேர்ந்த வாட்டாள் நாகராஜ் மிரட்டல் விடுத்துள்ளார்.
காவிரி பிரச்சனை
தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பை கண்டித்து கர்நாடக மாநிலம் முழுவதும் இன்று பந்த் நடைபெற்று வருகின்றது. கன்னட ஆதரவு கூட்டமைப்பான "கன்னட ஒக்குடா" அறிவித்த இந்த போராட்டத்தின் எதிரொலியாக தலைநகரான பெங்களூருவில் நேற்று இரவு 12 மணி முதல் இன்று வரை 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.
இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை 12 மணி நேரம் பந்த் அமலில் இருக்கும் என கூறப்படுகின்றது. ஒவ்வொரு முறை தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கு இந்த காவிரி நதிநீர் பிரச்சனை தலைதூக்கும் போதெல்லாம் அதில் தன்னை முழுமையாக அடையப்படுத்தி முன்னிறுத்திக்கொள்ள பிரயத்தனிப்பவர் வாட்டாள் நாகராஜ்.
இன்று நடைபெறும் பந்த்திற்கு தனது முழு ஆதரவை அளித்துள்ள அவர், செய்தியாளர்களை சந்தித்த போது, காவிரியில் தமிழ்நாட்டுக்கு சொட்டு நீரை கூட எந்த காரணத்தினாலும் திறந்து விட கூடாது என தடாலடியாக கூறி, ரஜினிக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.
ரஜினிக்கு மிரட்டல்
ரஜினிகாந்த் தமிழ்நாட்டில் இருந்தாலும் கர்நாடகாவில் இருந்த போது அவர் காவிரி நீரை குடித்தவர் என்பதால், கர்நாடகாவுக்கு ஆதரவாகத்தான் ரஜினிகாந்த் குரல் கொடுக்க வேண்டும் என்றும் காவிரி பிரச்சனை தொடர்பாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ரஜினிகாந்த் பேச வேண்டும் என கூறினார்.
கர்நாடகாவில் இருக்கும் வறட்சி குறித்து ரஜினிகாந்த் விளக்க வேண்டும் என கூறி, அப்படி இல்லாவிட்டால், அவரது திரைபப்டங்களை கர்நாடகாவில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்றும் ஏற்கனவே நடிகர் ரஜினிகாந்த் கர்நாடகாவுக்குள் நுழைய முடியாது எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.