வாரிசு - துணிவு நாளை வெளியீடு...பேனர் வைக்க போட்டி போடும் ரசிகர்கள்
துணிவு மற்றும் வாரிசு ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஒரே நாளில் வெளியாக இருக்கும் நிலையில் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் தியேட்டர்களுக்கு முன்பு பேனர்கள் வைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாளை வெளியாகும் திரைப்படங்கள்
இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் துணிவு மற்றும் இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் வாரிசு ஆகிய இரண்டு திரைப்படங்களும் 11ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அஜித், விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். பல வருடங்களுக்கு பிறகு அஜித் மற்றும் விஜய் ஆகியோரின் திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகவுள்ளன.
ஆகவே, இந்த பொங்கல் அஜித் மற்றும் விஜய் ரசிகர்ளுக்கு சிறப்பான,தரமான பொங்கலாக அமைந்துள்ளது. துணிவு, வாரிசு ஆகிய இரண்டு திரைப்படங்களும், ஒரே நாளில் வெளியாக இருக்கும் நிலையில் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்கில் பேனர்களை வைக்கும் பணியில் பரபரப்பாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோல், தமிழகத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களிலும் ரசிகர்கள் பேனர்கள் வைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
8 ஆண்டிற்கு பின் வெளியாகும் அஜித், விஜய் படங்கள்
கடந்த 2014ஆம் ஆண்டில் அஜித்தின் வீரம் மற்றும் விஜயின் ஜில்லா திரைப்படம் ஒரே நாளில் வெளியாகியிருந்தது.
அதற்க்கு பின் (எட்டு ஆண்டுகள் கழித்து), அஜித் மற்றும் விஜயின் திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாக இருக்கும் நிலையில்,
அஜித் ரசிகர்கள் 35அடியில் பேனர் வைத்தும், விஜய் ரசிகர்கள் 30அடியில் பேனர் வைத்தும் அவர்களின் கொண்டாட்டத்தை கொண்டாடி வருகின்றனர்.
நாளை வெளியாகும் திரைப்படத்திற்கு அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள். அவர்கள் வைத்த பேனர்களுக்கு மாலை அணிவித்தும், பால் அபிஷேகம் செய்தும், தோரணங்கள் கட்டியும் அவர்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், திரையரங்கில் அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் போலீசார் திரையரங்குகளில்,ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ரோகிணி தியேட்டரில் 20க்கும் மேற்பட்ட போலீசார் ரோந்து பணியில் உள்ளனர்.
இந்த நிலையில் தமிழக அரசு உயரமான பேனர்களை வைக்க தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.