வர்கீஸ் குரியன் பிறந்தநாள் நூற்றாண்டு விழா - பால் பாக்கெட்டுகளில் புகைப்படத்தை அச்சிட்டு கவுரவித்த ஆவின்
இந்தியாவின் பால் மனிதர் என்று போற்றப்படும் டாக்டர் வர்கீஸ் குரியனின் பிறந்தநாள் நூற்றாண்டை கொண்டாடும் விதமாக ஆவின்நிறுவனம் தனது பால் பாக்கெட்களில் அவரது படத்தை அச்சிட்டு, பெருமைப்படுத்தியது.
வர்கீஸ் குரியன் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் 1926-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி பிறந்தார். சென்னை லயோலா கல்லூரியில் இயற்பியல் துறையில் பட்டம் பெற்ற பிறகு, கிண்டி பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல் துறையில் பட்டம் பெற்றார். பின்னர், அரசுஉதவித் தொகையில் அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலப் பல்கலைக்கழகத்தில் இயந்திரவியல் பொறியியலில் எம்.எஸ். பட்டம் பெற்றார்.
இதையடுத்து, இந்தியா திரும்பிய குரியன், 1949-ம் ஆண்டு குஜராத் மாநிலத்தின் ஆனந்த் அரசுபால் பண்ணையில் பொறியாளராக பணியில் சேர்ந்தார். அந்த சமயத்தில், புதிதாக தொடங்கப்பட்ட கூட்டுறவு பால் பண்ணைகள், குஜராத் மாநில கைரா மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் பெரும் வீழ்ச்சியை சந்தித்து வந்தன.
அப்போது, கைராபால் சங்கத் தலைவர் திரிபுவன்தாஸ் படேலுக்கு, பால் பதப்படுத்தும் ஆலையை நிறுவத் தேவையான உதவிகளை செய்ய முன்வந்தார் குரியன். இதுதான் இந்தியாவில் புகழ்பெற்ற அமுல் பால் மற்றும் பால் பொருட்கள் தயாரிப்புநிறுவனம் உருவாக காரணமாக அமைந்தது. நவீன பால் உற்பத்தி குறித்து விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார் குரியன்.
பன்னாட்டு நிறுவனங்களால் நிராகரிக்கப்பட்ட ஏழை பால் கூட்டுறவு சங்கத்தை, ஆசியாவிலேயே மிகப் பெரிய, வெற்றிகரமான நிறுவனமாக உயர்த்திய பெருமை வர்கீஸ் குரியனையே சாரும். அமுலின் வெற்றி திட்டத்தை நாடு முழுவதும் கொண்டு செல்லும் விதமாக, ‘ஆபரேஷன் ஃப்ளட்’என்ற பெயரிலான திட்டத்தை 3 கட்டங்களில் செயல்படுத்த மத்திய அரசு முன்வந்தது.
அதுவே புகழ்மிக்க வெண்மைப் புரட்சியானது. தமிழக அரசு நிறுவனமான ஆவினும் வெண்மைப் புரட்சியின் வழித் தோன்றல்தான். வெண்மைப் புரட்சியின் தந்தையான வர்கீஸ்குரியன் பிறந்தநாளை ஆண்டுதோறும் நவம்பர் 26-ம் தேதி தேசியபால் தினமாக மத்திய கால்நடை பராமரிப்பு, பால்வளத் துறை சிறப்பாக கொண்டாடி வருகிறது.
அந்த வகையில், அவரது நூற்றாண்டு பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அவரை பெருமைப்படுத்தும் விதமாக ஆவின் பால் நிறுவனம் தனது பால் பாக்கெட்களில் ‘சேவையே வாழ்க்கை’ என்ற வரிகளுடன் டாக்டர் வர்கீஸ் குரியனின் புகைப்படத்தையும் வெளியிட்டு பெருமைப்படுத்தியுள்ளது.