வன்னியர் இடஒதுக்கீடு.. மாற்றிப் பேசும் அமைச்சர்கள்: அதிமுகவுக்கு பிரம்மாஸ்திரமா? பாதகமா?
தமிழக சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு சற்று முன்பாக அதிமுக வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை நிறைவேற்றியிருந்தது. இந்த கோரிக்கையை வலுயுறுத்தி அதிமுகவின் கூட்டணி கட்சியான பாட்டாளி மக்கள் கட்சி போராட்டங்கள் நடத்தி வந்தது. தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு (எம்.பி.சி) வழங்கப்படும் 20% இடஒதுக்கீட்டை மூன்றாக பிரித்து அதில் வன்னியர்களுக்கு மட்டும் என்றும் 10.5% இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
எம்.பி.சி பிரிவில் தனிப்பெரும் சமூகமாக உள்ள வன்னியர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் இல்லை என்பதால் தனி இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த மசோதாவால் எம்.பி.சி பிரிவில் உள்ள மற்ற சமூகங்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
அதிலும் குறிப்பாக சீர் மரபினர் பிரிவில் இருக்கும் முக்குலத்தோர் சமூகத்தின் மத்தியில் அதிமுகவிற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதிமுக தொடங்கப்பட்ட காலம் தொட்டு அதற்கு தென் மாவட்டங்களில் மிகப்பெரும் பலமாக இருப்பது முக்குலத்தோர் சமூகங்களின் வாக்கு வங்கியே. தற்போது வன்னியர் இடஒதுக்கீட்டால் அதிமுகவிற்கு தென் மாவட்டங்களில் அதன் பலமான இடங்களில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இதனால் அதிமுக அமைச்சர்கள் ’வன்னியர் இடஒதுக்கீடு தற்காலிகமானதே.. சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்பட்டு பிறகு திரும்பவும் மாற்றியமைக்கப்படும்' எனத் தெரிவித்து வருகின்றனர். அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இந்தக் கருத்தை தெரிவித்திருந்த நிலையில் தற்போது துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் இதே கருத்தை தெரிவித்துள்ளார்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலோடு நடைபெற்ற 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 9 இடங்களில் வென்று ஆட்சியை தக்கவைத்தது அதிமுக. இவை பெரும்பாலும் பாமக செல்வாக்கு பெற்ற வடமாவட்டத்தில் உள்ள தொகுதிகளே. எனவே தென் மாவட்டங்களில் அமமுக, ஆட்சி மீதான அதிருப்தி போன்ற விஷயங்களால் அதிமுகவின் முக்குலத்தோர் வாக்குவங்கி சரிவைச் சந்தித்துள்ள நிலையில் தற்போதும் வன்னியர் சமூகத்தின் வாக்கை அதிமுக பெரிதும் சார்ந்திருக்கிறது.
அதனால் தான் கூட்டணி பேச்சுவார்த்தைகளிலும் அதிமுக பாமகவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது. பாஜகவை விடவும் அதிக இடங்களில் பாமக போட்டியிடுகிறது. அதிமுகவின் இன்னொரு கூட்டணி கட்சியாக இருந்த தேமுதிக கூட்டணியில் இருந்து விலக பாமகவுக்கு வழங்கப்பட்ட முக்கியத்துவத்தையும் ஒரு முக்கிய காரணமாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
தென் மாவட்டங்களில் எழுந்த எதிர்ப்பை தணிக்கவே அதிமுக அமைச்சர்களின் கருத்துகள் உள்ளதாக பார்த்தாலும் இந்த முரண்பட்ட பேச்சுக்கள் வன்னியர் சமூகத்தில் அதிமுகவிற்கான ஆதரவை பெற்றுத்தருவதில் சிக்கலாக விளங்குகிறது. எனவே அதிமுக பிரம்மாஸ்திரமாக கருதிய வன்னியர் இடஒதுக்கீடு விவகாரம் அதற்கு பாதகமா அமைந்துவிடுமா என்பதை தேர்தல் முடிவுகளே உணர்த்தும்.