வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு: உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு

india tamil caste
By Jon Mar 03, 2021 03:07 PM GMT
Report

தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு மட்டும் 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு மட்டும் 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம் கடந்த பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இதனை எதிர்த்து தென்னாடு மக்கள் கட்சியின் நிறுவனரான கணேசன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருக்கிறார். அதில், ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடங்கியுள்ள நிலையில், கணக்கெடுப்பு முடிவதற்கு முன்னர் சட்டம் இயற்றப்பட்டது ஏன் என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

மேலும் 68 ஜாதிகளைச் சேர்த்து அவர்களுக்கு 7 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கிவிட்டு, வன்னியர்களுக்கு மட்டும் 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருப்பதாகவும் மீதமுள்ள 22 ஜாதிகளுக்கு வெறும் 2.5 சதவீத இட ஒதுக்கீடு மட்டுமே கொடுக்கப்பட்டிருப்பதாகவும் அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தற்போது இயற்றப்பட்டிருக்கும் சட்டம் தேர்தலை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டிருப்பதாகவும் கணேசன் அவரது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.