சீமானை சீண்டிய வன்னி அரசு : தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு சம்பவம்

seeman drramadoss vanniarasu
By Petchi Avudaiappan Dec 04, 2021 05:30 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

ஒரு வார பத்திரிகையில் வெளிவந்த போட்டோவை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் வன்னி அரசு தன்னுடைய ட்வீட்டில் ஷேர் செய்துள்ள சம்பவம் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நடிகர் சூர்யா நடித்து கடந்த மாதம் ஓடிடியில் வெளியான ஜெய்பீம் படத்தை தமிழக முதல்வர், திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவரும் பாராட்டிய நிலையில், படத்தில் வன்னியர் குறித்து தவறாக காட்சிப்படுத்தப்பட்டதாக பாமகவும், வன்னியர் சங்கமும் கடும் கண்டனம் தெரிவித்தன. 

இதனிடையே நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. சீமானிடம் ஜெய்பீம் குறித்த செய்தியாளர்கள் கேள்வியை எழுப்பினர். 

அதற்கு நான் படத்தை பார்த்தபோது எனக்கு அதுபோன்று எதுவும் தெரியவில்லை.. ஆனால், மற்றவர்கள் இதுகுறித்து பேசியபோது எனக்கு தெரிந்தது... அக்னி கலசம் பாமகவின் குறியீடு என்பது உலகிற்கே தெரியும்.

அந்தோணிசாமி என்கிற பெயரை ஏன் மாற்ற வேண்டும்? அதேபோல வன்னியர் சங்கத்தின் அடையாளமாக இருக்கும் அந்த குறியீட்டை ஏன் காலண்டரில் பயன்படுத்த வேண்டும்? அதையெல்லாம் தவிர்த்திருக்கலாம். நான் கவனித்திருந்தால் முன்பே அதனை நீக்க சொல்லியிருப்பேன் என கூறினார். சீமானின் இந்த பேச்சு மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது.

இதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் வன்னி அரசும் கடுமையான கண்டனத்தை பதிவு செய்திருந்தார். அவர் தனது ட்விட்டர் பதிவில் "சாதி மாறி திருமணம் செய்யக்கூடாது என்பது தான் #இந்துத்துவக்கட்டமைப்பு. சாதி மீறி திருமணம் செய்தால் படுகொலை செய்கிறது மதவாதம். அதன் பெயரே #ஆணவப்படுகொலை.இந்த இந்துத்துவக்கருத்தியலே இந்தியா முழுக்க படுகொலை செய்யத்தூண்டுகிறது. இதுகூட தெரியாமல் உளறிக்கொண்டு இருக்கிறார் என சீமானையே டேக் செய்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. 

மேலும் திரௌபதி, ருத்ரதாண்டவம் படங்களில் தலித்துகளை இழிவுபடுத்தும் காட்சிகளை தவிர்த்திருக்கலாம் என சொல்ல துணிச்சல் இல்லாமல் அக்னிசட்டிக்கு மட்டும் பொங்குவது என்ன உளவியல்? என மீண்டும் சீமானிடம் கேள்வி எழுப்பியிருந்தார். 

இந்நிலையில் ஒரு பிரபல பத்திரிகை அட்டைப்படம் ஒன்றினை பதிவிட்டுள்ளது.. அதில், "எங்க போட்டோ, உங்க கமெண்ட்" என்ற தலைப்பில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசும், சீமானும் இருப்பது போன்ற போட்டோவையும் பதிவிட்டுள்ளது.. வாசகர்களின் கருத்தையும் அதில் கேட்டிருந்தது. ஏதோ விழாவில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸூம், சீமானும் கலந்து கொண்டுள்ளனர். 

அங்கு ராமதாஸ் சேரில் உட்கார்ந்திருக்கிறார், அவருக்கு பக்கத்திலேயே மண்டியிட்டு கீழே உட்கார்ந்து சீமான் பவ்யமாகவும், மரியாதையாகவும் ராமதாசிடம் ஏதோ பேசி கொண்டிருக்கிறார். இது முன்னெப்போதோ எடுத்த பழைய போட்டோ என்றாலும் தற்போது பதிவிடப்பட்டது. 

இந்த போட்டோவைதான் வன்னி அரசு ஷேர் செய்து ஒரு பதிவும் போட்டுள்ளார்.. அதில், "சாதியவாதிகளிடமும் மதவாதிகளிடமும் மண்டியிடும் எவனும் சமத்துவத்தை படைக்க முடியாது"- தோழர் பெரியார்.. "கேட்டுச்சாண்ணே".. என்று பதிவிட்டுள்ளார். வன்னி அரசு இப்படி ஒரு ட்வீட் போட்டதுமே வன்னியர்கள் வரிந்து கட்டிக் கொண்டு வந்து, பதில் கமெண்ட் போட்டு வருகின்றனர்.