வாணியம்பாடி போன்ற சம்பவங்கள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படும் - முதலமைச்சர் அறிவிப்பு
வாணியம்பாடி போன்ற சம்பவங்கள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஆக.13-ம் தேதி பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 14-ம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து, பட்ஜெட் மீதான பொது விவாதம், பதிலுரை நடைபெற்றது. தொடர்ந்து, ஒவ்வொரு துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.
இந்நிலையில், சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று (செப். 13) நீட் தேர்வுக்கு விலக்கு பெறும் வகையில் புதிய மசோதாவை முதல்வர் ஸ்டாலின் அறிமுகம் செய்து தாக்கல் செய்தார்.
முன்னதாக, திருப்பத்துார் மாவட்டம் வாணியம்பாடியில் வாசிம் அக்ரம் என்ற முஸ்லிம் நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
அப்போது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார். இதற்கு முதல்வர் ஸ்டாலின் பதிலளித்துப் பேசியதாவது: "வாணியம்பாடி பகுதியில் நடைபெற்ற அந்தச் சம்பவத்தைப் பற்றி அவர் சொல்கிறபோது, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சொல்லிவிட்டு, சிலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் என்ற அந்தச் செய்தியையும் சொல்லி, அவர் இங்கே ஒப்புதல் தந்திருக்கிறார்.
எனவே, அதுகுறித்து நான் விளக்கிச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். கடந்த 26-7-2021 அன்று, வாணியம்பாடி ஜீவா நகரைச் சார்ந்த இம்தியாஸ் என்பவருக்குச் சொந்தமான கிடங்கில் கஞ்சா இருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து, காவல்துறையினர் ரெய்டு செய்திருக்கிறார்கள்.
அதில், 9 கிலோ கஞ்சா, மூன்று கத்திகள், 10 கைப்பேசிகள் ஆகியவற்றைக் கைப்பற்றி, பைசல் உள்ளிட்ட மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். கஞ்சா குறித்த தகவலை வாசிம் அக்ரம்தான் காவல் துறையினருக்குக் கூறியது என்று இம்தியாஸ் கருதியுள்ளார்.
இந்நிலையில், 10-9-2021 அன்று மாலை சுமார் 6-30 மணியளவில் வாசிம் அக்ரமை வழிமறித்து, அரிவாளால் வெட்டியதால், அதே இடத்தில் அவர் உயிரிழந்துள்ளார்.
இந்தக் கொலை வழக்கில் செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூரைச் சார்ந்த பிரசாத் மற்றும் மண்ணிவாக்கத்தைச் சார்ந்த டெல்லி குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
வாணியம்பாடி பகுதியில் தக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. இதுபோன்ற சம்பவங்களை இரும்புக்கரம் கொண்டு இந்த அரசு தடுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்வதாக பேசினார்.