வாணியம்பாடி முஸ்லீம் இளைஞர் படுகொலை வழக்கில் காவல் ஆய்வாளருக்கு தொடர்பா?
வாணியம்பாடியில் மஜக முன்னாள் நிர்வாகி வசீம் அக்ரம் படுகொலை விவகாரம் காவல் ஆய்வாளர் கோவிந்தசாமி பணியிடை நீக்கம் செய்து டிஐஜி பாபு உத்தரவு.உண்மை நிலவரம் என்ன? சற்று விரிவாக பார்க்கலாம்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் வசீம் அக்ரம். இவர் வாணியம்பாடி முன்னாள் நகரமன்ற உறுப்பினராகவும் மனிதநேய ஜனநாயக கட்சியின் முன்னாள் நிர்வாகியாக இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் அதே பகுதியில் வசித்து வருபவர் டீல் இம்தியாஸ். இவர் சென்னை மற்றும் வாணியம்பாடி ஆகிய ஊர்களில் பழைய இரும்பு பொருட்கள் வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.
கடந்த ஜூலை மாதம் 25ம் தேதி வசீம் அக்ரம் நண்பரான நயீம் என்பவரை டீல் இந்தியாஸ் தாக்கியுள்ளார். இதுதொடர்பாக வசீம் அக்ரம் டீல் இம்தியாஸ்யிடம் சென்று நண்பர் நயீம் எதற்காக தாக்கினார் என்று கேட்டுள்ளார்.
அப்போது டீல்இம்தியாஸ் மற்றும் அவருடன் இருந்தவர்கள் வசீம் அக்ரமை தாக்கியுள்ளனர். இதனால் இருவருக்கும் முன் விரோதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஜூலை மாதம் 26ஆம் தேதி டீல் இம்தியாஸ்க்கு சொந்தமான ஜீவா நகர் பகுதியில் உள்ள குடோனில் திடீரென திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபிசக்கரவர்த்தி தலைமையிலான காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது கிடங்கில் 8 கிலோ கஞ்சா, 10 பட்டாகத்தி, 10 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து குடோனில் பதுங்கியிருந்த ரஹீம், பசல், சலாவுதீன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து மேலும் தலைமறைவான டீல் இம்தியாஸ் மற்றும் செல்லா என்கிற செல்வகுமார் ஆகியோரை தேடி வந்தனர்.
இவ்வழக்கில் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் குடோனுக்கு உடனடியாக சீல் வைக்க வேண்டும் என்று திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்ததின் பேரில் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா உத்தரவை தொடர்ந்து வட்டாட்சியர் மோகன் சீல் வைத்தார்.
தொடர்ந்து தலைமறைவாக இருந்த டீல் இம்தியாஸ் என்பவரை காவல்துறையினர் தேடி வந்த நிலையில் சென்னையை சேர்ந்த சீசிங் ராஜா குரூப்பை சேர்ந்தவர்களுடன் பேசி தொடர்ந்து தனக்கு வாணியம்பாடியில் வசீம் அக்ரம் என்பவர் தொல்லை கொடுத்து வந்ததாகவும், அவரை உடனடியாக கொலை செய்ய வேண்டும் என்று கூறி இருந்ததாக கூறப்படுகிறது.
இதனை ஓட்டேரி வண்டலூர் பகுதியை சேர்ந்த டில்லி குமார் மற்றும் பிரசாந்த் என்கிற ரவி ஆகியோர் தலைமையில் 8 பேர் கொண்ட கும்பல் வாணியம்பாடி வந்து வசீம் அக்ரமை நோட்டமிட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை வசீம் அக்ரம் ஜீவா நகர் பகுதியில் உள்ள பிலால் பள்ளிவாசலுக்கு தனது 8 வயது மகனுடன் தொழுகைக்குச் சென்று வீடு திரும்பி கொண்டிருந்த போது மர்ம கும்பல் வசீம் அக்ரம் வழிமறித்து சரமாரியாக வெட்டி படுகொலை செய்து காரில் தப்பி சென்றனர்.
குற்றம்வாளிகளை பிடிக்க வேலூர் சரக டி.ஐ.ஜி பாபு உத்தரவின் பேரில் மூன்று தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் பாலுசெட்டிசத்திரம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வாகன சோதனையில் காவல்துறையினர் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது போலீசார் வாகன தணிக்கை நடைபெறுவது அறிந்த 8 பேர் கொண்ட கும்பல் காரில் இருந்து இறங்கி தப்ப முயன்றனர். இதனை பார்த்த போலீசார் அவர்களை பிடிக்க முற்பட்ட போது 6 தப்பி உள்ளனர். 2 பேர் பிடிபட்டனர். அவர்களிடமிருந்து 11 பட்டாகத்திகள், செல்போன்களை கைப்பற்றிய தொடர்ந்து தீவிர விசாரணை செய்ததில் அவர்கள் வாணியம்பாடியில் கொலை செய்துவிட்டு காரில் தப்பி வந்ததாகவும் அவர்கள் ஓட்டேரி வண்டலூர் பகுதியை சேர்ந்த டில்லி குமார் மற்றும் பிரசாந்த என்கிற ரவி என்பது தெரியவந்தது.
காஞ்சிபுரம் காவல் துறையினர் கைது செய்த 2 பேரை வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் டீல் இம்தியாஸ் என்பவர் கிடங்கில் 10 பட்டாக்கத்திகள்,10 செல்போன், 8 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து 3 பேர் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள டீல் இம்தியாஸ் உட்பட 2 பேர் கைது செய்யாததால் மஜக நிர்வாகி படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் நகர காவல் ஆய்வாளர் கோவிந்த சாமி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். காவல் ஆய்வாளர் டீல் இம்தியாசுக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது.இந்த கொலை சம்பவத்தில் காவல் ஆய்வாளர் கோவிந்தசாமிக்கும் தொடர்பு இருக்கலாம் என கூறப்படுகிறது.
வசீம் அக்ரம் படுகொலை சம்பந்தமாக சட்ட பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் நோட்டீஸ் வழங்கியுள்ளதாகவும், கஞ்சா தொழில் செய்பவர்களையும் அவர்களுக்கு உடந்தையாக உள்ள காவல்துறையினர் மீதும் நடவடிக்கை எடுத்து இரும்பு கரம் கொண்டு ஒழிக்க வேண்டும் என மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.