வந்தவாசியில் ஆட்டோ டிரைவரை ஓட ஓட விரட்டி கொலை செய்த மர்ம நபர்கள்
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி கோட்டைக்குள் தெருவில் ஆட்டோ டிரைவரை பத்து பேர் கொண்ட கும்பல் ஓட ஓட விரட்டி கொடுரமாக வெட்டிக் கொலை செய்து தப்பித்துச் சென்றனர். வந்தவாசி கோட்டைக்குள் தெருவைச் சேர்ந்தவர் நசீர் கான். இவர் தாலுகா அலுவலக சாலையில் உள்ள அம்மா உணவகம் அருகே ஆட்டோ ஓட்டி வருகிறார்.
இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மஸ்தான் என்பவருக்கும் முன்விரோதம் காரணமாக ஆட்டோ டிரைவர் நசீர் கான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மஸ்தானை தாக்கி கொலை முயற்சி செய்யப்பட்டு அது சமந்தமாக வந்தவாசி காவல் நிலையத்தில் வழக்கு உள்ளது. இதையடுத்து ஏப்ரல் 7-ம் தேதி இரவு நசீர் கான் தன்னுடைய வேலையை முடித்துக் கொண்டு கோட்டைக்குள் பகுதியில் உள்ள தன்னுடைய வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது அங்கு மறைந்து இருந்த பத்து பேர் கொண்ட கும்பல் முகமூடி அணிந்து கொண்டு நசீர்கானை கத்தியால் தலை, கழுத்து, முகத்தில் சரமாரியாக வெட்டினர்.

பின்னர் நசீர் கான் அங்கிருந்து தப்பி சிறிது தூரம் ஓட முயன்றார். அப்போது மர்ம நபர்கள் துரத்தி வந்து கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து தகவலறிந்த வந்தவாசி டிஎஸ்பி தங்கராமன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
நசீர் கான் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மேலும் நசீர் கானை வெட்டியது யார் என்று போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர். ஆட்டோ டிரைவர் நசீர் கான் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.